குடியரசுத் தின அணிவகுப்பு : டெல்லியில் மாஸ் காட்டிய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி.. இதனை வடிவமைத்தது இந்த CWC பிரபலம் தானா..!

By Archana on ஜனவரி 27, 2024

Spread the love

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தியில், பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறையை மையப்படுத்தி தத்ரூபமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ‘பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை – மக்களாட்சியின் தாய்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10ம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டு, கடமைப் பாதையில் ஊர்வலம் சென்றது.

#image_title

இந்த அலங்கார ஊர்தி, சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த (குடத்தில் பனையோலைகள்) தேர்தல் முறையைப் பிரதிபலிக்கிறது. இது மக்களாட்சி முறையின் முன்னோடியாகும். கிராம நிர்வாகத்தை நடத்துவதற்கும், அப்பகுதியின் எண்ணங்களைப் பேரரசுக்கு தெரிவிக்க பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கும் இது பயன்பட்டது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் குடவோலை முறைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்த அமைப்பு ஜனநாயகத்தை நோக்கிய ஒரு தொடக்கநிலை முன்னெடுப்பை குறிக்கிறது.

   
   

#image_title

 

டிராக்டர், முகப்புப் பகுதியில் உள்ள சிற்பம் அனைத்து ஓலைகளும் குடத்தில் போடப்பட்ட பிறகு பிரதிநிதிகள் தேர்வுமுறையை சித்தரிக்கிறது. டிரெய்லர், முதன்மைப் பகுதி தேர்தல் நடைமுறைகள் மற்றும் கிராம மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தலை விவரிக்கிறது. முக்கிய தகவல்களை மக்களுக்கு அறிவிக்க பயன்படும் பறை, ஊரின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள அனைத்து மக்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை குடத்தில் இடுவதற்கு வரிசையில் நிற்றல், ஒரு சிறுவன் குடத்திலிருந்து ஓலையை எடுத்தவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரினை உரக்க அறிவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஊர்ப் பெரியவர்கள் மாலை அணிவித்து வாழ்த்துதல், வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆடுதல், கிராம மக்கள் ஓர் ஆலமரத்தடியில் ஒன்று கூடி கிராம மேம்பாட்டுத் திட்டங்களைத் தீட்டுதல் ஆகிய காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

#image_title

குடவோலை முறையை விவரிக்கும் கல்வெட்டு அமைந்துள்ள உத்திரமேரூர் வைகுண்டபெருமாள் கோயிலின் உருவ மாதிரியும் அலங்கார ஊர்தியில் இடம் பெற்றுள்ளது. மேலும், குடவோலை குறித்து குறிப்பிடும் மருதன் இளநாகனார் எழுதிய ‘கயிறுபிணிக் குழிசி ஓலை’ என்ற சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் வரிகளுக்கு இசைக் கோர்ப்பு செய்யப்பட்டு மகளிர் ஆடிய நடனம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. இத்தகைய சிறப்பை பெற்ற இந்த ஊர்தியை வடிவமைத்தது நடிகரும், கலை இயக்குநருமான கிரண்.

 

View this post on Instagram

 

A post shared by Drk Kiran (@kiran.drk)

கிரண் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷை மிரட்டும் வில்லனாக அனைவர் மனதிலும் பதிந்தவர். இவர் ஒரு நடிகராக தடம் பதிப்பதற்கு முன்பே கலை இயக்குநராக தடம் பதித்தவர். கோ, மாற்றான், கவண், அனேகன், இரண்டாம் உலகம், 3 ஆகிய படங்களின் கலை இயக்குநர் இவர் தான். அனேகன் படத்தில் நாம் பார்த்த பல இடங்கள் உண்மையானதல்ல. எல்லாம், இவர் கை வண்ணத்தில் உருவான செட்கள். எதுவும் செட் எனத் தெரியாமல் செய்து காட்டுவது தான் இவரது வேலை. கே.வி.ஆனந்தின் ஆஸ்தான கலை இயக்குநர். நடிகர் சூர்யாவின் நெருங்கிய தோழர். செல்வராகவனின் நண்பர் என இவரது ஃபுரஃபைல் பிரமிக்கத்தக்கது. இவர் தான் குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட குடவோலை ஊர்தியையும் தயாரித்துள்ளார். அதனை தயார் படுத்தும் முன்பு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Drk Kiran (@kiran.drk)

author avatar
Archana