விற்கும் விலைவாசியில் ஒரு காலத்தில் 2 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த இட்லியின் விலை சாதாரணமான ஹோட்டல்களில் கூட இன்று ரூ.10-க்கு விற்கப்படுகிறது. தோசையின் விலை 50-ஐ தொட்டு விட்டது. சாதாரணமான ஹோட்டல்களில் இந்த விலைப்பட்டியல் என்றால் சற்று ஹைகிளாஸ் ஹோட்டல்களில் மிடில் கிளாஸ் மக்கள் உள்ளே கூட நுழைய முடியாது.
ஆனால் கோவையில் ரூ.20-க்கு தரமான உணவினை வயிராற வழங்கி கோவை மக்களுக்கு பசி ஆற்றும் தாயாகத் திகழ்கிறது சாந்தி கேண்டீன். இந்த ஹோட்டலின் பின்னணி என்ன எப்படி சாத்தியம் என்று பார்ப்போமா?
தினமும் 3000 நபர்களுக்கு மேல் தரமான சாப்பாடு வழங்கும் சாந்தி கேண்டீனை நிறுவியவர் சுப்பிரமணியம் என்பவர்தான். கோவை சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவரது மனைவியின் பெயர் தான் சாந்தி. தனது மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் என்ற பெயரில் இதனை அவர் நடத்தி வருகிறார்.

#image_title
தமிழகத்தில் தரமான உணவுகளை இவர்கள் அளவிற்கு எந்த ஒரு உயர்தர உணவகமும் கொடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூ.20-க்கு முழுச் சாப்பாடு, ரூ.5 முதல் ரூ.15-க்கு டிபன் வகைகள், பில்டர் காபி, டீ, ராகி பால், சத்து மாவு பால் என்று எதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் விலை ரூ.5 தான். நாம் மூன்று வேளையும், கொலைப் பசியில் சாப்பிட்டாலும் பில் நூறு ரூபாயைத் தாண்டாது. இதனால், இந்த பகுதியில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அங்கு குடியிருப்பவர்கள் அந்த வீடுகளில் சமையல் செய்வதும் கிடையாது.
ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
தனது சேவை உணவோடு நின்று விடக் கூடாது என்பதற்காக கல்வி, எரிபொருள், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு.

#image_title
இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லையாம். பெரும்பாலான ஊடகங்கள் அவரைச் சந்தித்துப் பேட்டியெடுக்க முயற்சி செய்தன. ஆனால் அவர் அந்த விளம்பரத்தை விரும்பவில்லை.
ஒரு மினி அரசாங்கமாகவே செயல்பட்டு கோவை மட்டுமல்லாது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தெய்வமாகவே விளங்குகிறார் இந்த மாமனிதர்.