Connect with us

LIFESTYLE

பணத்தைப் பெருக்கும் வித்தையை கற்றுத் தரும் போஸ்ட் ஆபிஸ்.. இவ்ளோ திட்டங்கள் இருக்கா..?

தினமும் நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அன்றைய தினமே அந்தப் பணத்திற்கு ஏற்ற செலவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவசரத்திற்குக் கூட நம்மிடம் சேமிப்பு இல்லாமல் நகையை அடகு வைக்கவோ அல்லது யாரிடமாவது கடன் வாங்கவோ தள்ளப்படுகிறோம். ஆனால் சேமிப்பின் அவசியம் குறித்து யாரும் உணர்வதில்லை. மிகவும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அஞ்சலகங்களில் சிறிய தொகையைக் கூட சேமிக்கலாம் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு சிறுகச் சிறுகச் சேர்க்கும் தொகை பின்னாளில் வளர்ந்து விருட்சமாக கை கொடுக்கும் என்பதுதான் நிஜம். அவ்வாறு அஞ்சலகங்களில் அதிக வட்டி தரும் சில சேமிப்புத் திட்டங்கள் பற்றிக் காண்போம்.

#image_title

   

தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit)
வங்கிகளில் Fixed Deposit என அழைக்கப்படும் இந்த முறை அஞ்சல் அலுவலகங்களில் Time Deposit என அழைக்கப்படும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். ஓராண்டுக்கு 6.9% சதவீத வட்டியும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் கால வைப்பிற்கு 7.5% சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 1,37,500 ரூபாய் இருக்கும்.

உலகத்திலேயே இந்த நாட்டுப் பணம் தான் மதிப்பு அதிகம்.. அப்போ இந்திய பணத்துக்கு இவ்ளோதான் மதிப்பா?

தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான திட்டம் (National Savings Monthly Income Scheme)
தேசிய சேமிப்பு மாதாந்திர வருமான கணக்கு என்பது மாதாமாதம் வட்டி தரக்கூடிய சேமிப்புத் திட்டம். 7.4% வட்டி தரப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதுவே கூட்டுக்கணக்காக இருந்தால் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள்.

Post2

#image_title

ஒருவேளை இந்தத் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே நீங்கள் வெளியேற நினைத்தால் முதல் ஓராண்டிற்கு பணத்தை எடுக்க முடியாது. ஓராண்டிற்கு பின்னரோ, மூன்று ஆண்டிற்கு முன்னரோ கணக்கை முடித்தால் உங்கள் முதலீட்டில் 2% சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளியேற நினைத்தால் 1% பிடித்தம் செய்யப்படும். எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தில் நாம் பெற்ற வட்டித்தொகையோடு ஒப்பிடும் போது முதலீட்டில் பிடித்தம் செய்யப்படும் தொகை குறைவாகவே இருக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் மொத்தம் 37,000 ரூபாய் வட்டியாக உங்களுக்கு கிடைக்கும். அதுவே இந்தத் திட்டத்தின் உச்சபட்ச முதலீடான 15 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 5,55,000 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் (Senior Citizen Savings Scheme)

அஞ்சலக சேமிப்புத் திட்டங்களிலேயே இந்தத் திட்டத்திற்குத்தான் அதிக வட்டிதரப்படுகிறது. இதன் வட்டி விகிதம் 8.2% ஆகும். குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக 30 லட்சம்வரையும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். வட்டித்தொகை ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை, சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 1,41,000 ரூபாய் இருக்கும். அதுவே உச்சபட்ச முதலீடான 30 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் உங்கள் கையில் 42,30,000 ரூபாய் இருக்கும்.

மகிளா சம்மான் சேமிப்புத்திட்டம் (mahila samman patra)
இது பெண்களின் சேமிப்பை ஊக்குவிப்பதற்காக அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் பிரத்யேக திட்டம். இரண்டு ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. அஞ்சல் அலுவலகம், வங்கிகளில் உள்ள மற்ற திட்டங்களோடு ஒப்பிட்டால், இந்தத் திட்டம்தான் குறுகிய கால சேமிப்பிற்கு அதிக வட்டி தரக்கூடியது. குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதல் ரூ.2,00,000 லட்சம்வரை முதலீடு செய்யலாம்.

உதாரணமாக, ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகள் முடிவில் உங்கள் கையில் 1,16,022 ரூபாய் இருக்கும். அதுவே, உச்சபட்ச தொகையான இரண்டு லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகள் முடிவில் அதன் மதிப்பு 2,32,000 ரூபாயாக இருக்கும்.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund Account)
தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்து ஓராண்டைக் கடந்துவிட்டாலே அதிலிருந்து நீங்கள் கடனும் பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஒரு நிதியாண்டிற்கு ஒருமுறை மட்டுமே கடன் வழங்கப்படும் நிலையில், கடனை திருப்பிச் செலுத்தாதவரை அடுத்த கடன் வழங்கப்படாது.

Post 1

#image_title

பெற்ற கடனை 36 மாதத்திற்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் ஆண்டுக்கு 1% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு 6% வட்டி வசூலிக்கப்படும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 27,12,139 ரூபாய் இருக்கும். அதாவது உங்களுக்கு வட்டியாக மட்டுமே 12,12,139 ரூபாய் கிடைத்திருக்கும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana)
இது பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் இணைய உங்கள் பெண் குழந்தை 10 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 250 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1,50,000வரையும் செலுத்தலாம். இந்தத் திட்டத்திற்கு தற்போது 8% வட்டி வழங்கப்படுகிறது.

21 ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்தத் திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் மட்டும் போதும். எனினும், திட்ட முதிர்வின் போது 21 ஆண்டுகளுக்கான வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டமும் கூட்டுவட்டி அளிக்கக் கூடிய திட்டம் என்பதால் ஆண்டுக்கு ஒரு லட்சம் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 44,89,690 ரூபாய் இருக்கும்.

கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra)
மக்களிடையே நீண்ட கால முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இது உங்களின் முதலீட்டை இரட்டிப்பாக்க சிறந்த திட்டம். இந்தத் திட்டத்தின் கால அளவு 115 மாதங்கள். அதாவது, 9 ஆண்டுகள் 7 மாதங்கள். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு கிடையாது. 7.5% கூட்டுவட்டி வழங்கப்படும் இந்தத் திட்டத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடங்க முடியும்.

இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் திட்ட முதிர்வின் போது உங்கள் கையில் 2 லட்சம் இருக்கும். 10 லட்சம் முதலீடு செய்தால் உங்கள் கையில் 20 லட்சம் இருக்கும்.

தேசிய சேமிப்பு பத்திரம் ( National Savings Certificate)
இது 5 ஆண்டுகள் கால அளவு கொண்ட அனைவருக்குமான திட்டம். குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு கிடையாது. 7.7% கூட்டு வட்டி வழங்கும்  ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாண்டுகள் முடிவில் உங்கள் கையில் 1,44,903 ரூபாய் இருக்கும். அதாவது, உங்கள் முதலீட்டு தொகை 40%க்கும் மேலாக அதிகரித்திருக்கும்.

Continue Reading

More in LIFESTYLE

To Top