ஆளே இல்லாமல் தானாக சென்ற கப்பல்! பல கேப்டன்களின் உயிரை காவு வாங்கிய மர்ம சம்பவம்! ஒரே திகிலா இருக்கேப்பா!

By Arun

Published on:

1872 ஆம் ஆண்டு மேரி செலஸ்டி என்ற சரக்கு கப்பல் மதுபானங்களுக்கு தேவையான அல்கஹாலை பேரல் பேரலாக ஏற்றிக்கொண்டு நியூயார்க்கில் இருந்து இத்தாலிக்கு கிளம்பியது. அந்த கப்பலின் கேப்டனான பிரிக்ஸ் அந்த கப்பல் கிளம்புவதற்கு முன் மோர்ஹவுஸ் என்பவருடன் சேர்ந்து தனது குடும்பத்துடன் உணவருந்தினார்.

மோர்ஹவுஸ் டெய் கிராட்டியா என்ற சரக்கு கப்பலின் கேப்டன். மோர்ஹவுஸும் பிரிக்ஸும் இளம்வயதில் ஒன்றாக பணியாற்றியவர்கள். “உனது மேரி செலஸ்டி கப்பல் எங்கே போகிறது?” என கேட்டார் மோர்ஹவுஸ். “இத்தாலியில் உள்ள ஜெனோவோ” என்று பதிலளித்தார் பிரிக்ஸ்.

   

“எனது கப்பலும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஜெனோவோதான் வருகிறது. நான் கிளம்புவதற்கு பத்து நாட்கள் ஆகும். இத்தாலியில் சந்திப்போம்” என்று கூறி இரண்டு கேப்டன்களும் விடைபெற்றுக்கொண்டனர்.

1872 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நியூயார்க் துறைமுகத்தில் இருந்து கிளம்பியது மேரி செலஸ்டி. அதன் பின் பத்து நாட்கள் கழித்து மோர்ஹவுஸும் ஜெனோவோவுக்கு தனது கப்பலுடன் கிளம்பினார். டிசம்பர் 4 ஆம் தேதி போர்ச்சுக்கலுக்கு 600 கடல் மைல்கள் தூரம் இருக்கும் இடத்தில் மேரி செலஸ்டி மிதந்துகொண்டிருந்தது.

அதனை தனது கப்பலில் இருந்து பார்த்த மோர்ஹவுஸ், தனது நண்பனின் கப்பலுக்கு என்ன ஆயிற்று என்று அந்த கப்பலுக்குள் தனது துணை கேப்டனை அனுப்பினார். அப்போதுதான் தெரிந்தது, உள்ளே பிரிக்ஸும் இல்லை, அவரது குடும்பத்தினரும் இல்லை, ஊழியர்களும் இல்லை என்று. கப்பல் தானாகவே பல மைல் தூரம் ஆள் இல்லாமல் மிதந்து வந்திருப்பது தெரிந்தது.

கடற்கொள்ளையர்கள் வந்து அனைவரையும் கொன்று கடலில் வீசியிருப்பார்களோ என்று மோர்ஹவுஸ் யூகித்தார். ஆனால் கடற்கொள்ளையர்கள் சரக்குகளை கொள்ளையடித்திருப்பார்களே, ஆனால் இதில் எந்த பொருளும் கொள்ளைப் போகவில்லை. கப்பல் எந்த வித சேதாரமும் இன்றி இருந்தது. ஆனால் உயிர்காக்கும் படகு மட்டும் காணவில்லை.

அப்படி என்றால் நடுக்கடலில் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது. அது என்ன என்று தெரியவில்லை. அதன் பின் அந்த கப்பலை மோர்ஹவுஸ் தனது கப்பலுடன் இணைத்துக்கொண்டு ஜெனோவோ கிளம்பிவிட்டார். பல நாட்கள் ஆகியும் பிரிக்ஸும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அந்த கப்பலில் பணியாற்றிய ஊழியர்கள் குறித்தும் எந்த வித தகவலும் இல்லை. அவர்கள் எங்கே போனார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. பல கோணங்களில் பல துப்பறியும் நிபுணர்கள் விசாரித்து பார்த்தும் எதுவும் துப்பு கிடைக்கவில்லை.

சரி, இந்த மேரி செலஸ்டி கப்பலின் திகில் வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம். இந்த மேரி செலஸ்டி உருவானபோது இந்த கப்பலின் பெயர் அமேசான். இந்த கப்பலை தயாரித்தவர் ஜோசுவா என்பவர். இந்த கப்பலில் நியமிக்கப்பட்ட முதல் மூன்று கேப்டன்கள் ஒவ்வொரு காரணத்திற்காக உயிரிழந்தனர். அதன் பின் பல நாட்கள் பல கேப்டன்களை பார்த்து ஒரு நாள் புயலில் சிக்கி தரை தட்டியது.

அதன் பின் ஜோசுவா இந்த கப்பலை ரிச்சர்ட் என்பவரிடம் சொற்ப பணத்தை வாங்கிகொண்டு விற்றார். அதன் பின் அந்த கப்பலை 4 பேர் சேர்ந்து வாங்கினார்கள். அதில் கேப்டன் பிரிக்ஸிற்கு 8 பங்குகள் இருந்தது. அந்த பிரிக்ஸ்தான் கப்பலில் இருந்து காணாமல் போனவர்.

பிரிக்ஸ் காணாமல் போன பிறகு அந்த கப்பலை வாங்கிய யாருமே நிம்மதியாக இருந்ததில்லையாம். அந்த கப்பலை வாங்கிய ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துப்போனார். அவருடன் இருந்தவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு இந்த கப்பல் ஒரு சபிக்கப்பட்ட கப்பலாக மாறியது. எனினும் கடைசிவரை பிரிக்ஸும் அவரது குடும்பத்தினரும் அந்த கப்பலில் பணியாற்றிய ஊழியர்களும் என்ன ஆனார்கள் என்று இன்று வரை மர்மமாகவே உள்ளது.

author avatar