அடுத்த நொடியில் என்னென்ன ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கிறதோ இந்த வாழ்க்கை! நமது வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக பல சம்பவங்களை நாம் அனுபவித்திருக்கிறோம்.
ஆனால் அதிசயமாக இருந்தாலும் அது கொடுமையான அனுபவமாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அப்படி ஒரு கொடூரமான அனுபவத்தை அனுபவித்தவர்தான் வெஸ்னா வுலோவிக். 1972 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி யுகோஸ்லோவியாவைச் சேர்ந்த ஜாட் ஃப்ளைட் என்ற டென்மார்க் செல்லும் விமானத்தில் பணிப்பெண்ணாக ஏறினார் வெஸ்னா வுலோவிக்.
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், அன்றைக்கு அவருக்கு பதிலாக வெஸ்னா என்ற அதே பெயர் கொண்ட வேறு ஒரு பணிப்பெண்தான் அந்த விமானத்தில் ஏறுவதாக இருந்தது. இருவருக்கும் ஒரே பெயர் இருந்ததால் அட்டவணையில் குழப்பம் ஏற்பட்டு வெஸ்னா வுலோவிக் அந்த விமானத்தில் ஏறிவிட்டார். நேரம் எப்படி எல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்!
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் மோதி பல துண்டுகளாக சிதறி விழுந்தது. விமானம் வெடித்து சிதறியதை நேரில் பார்த்த ஒரு மருத்துவர், விமானம் வெடித்து சிதறிய இடத்திற்கு விரைந்து போனார். அங்கே பணிப்பெண்கள், பைலட்டுகள், பயணிகள் என எவரும் உயிரோடு இல்லை.
ஆனால் பணிப்பெண்ணான வெஸ்னாவின் உடலில் மட்டும் அசைவு தெரிந்தது. அதனை பார்த்த மருத்துவர் வெஸ்னாவிற்கு முதலுதவி செய்து அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வெஸ்னாவின் மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதே போல் அவரது முதுகெலும்பும் கால் எழும்பும் முறிந்துப்போயிருந்தது. அது போக உடம்பில் ஏகப்பட்ட காயங்கள்.
வெஸ்னாவுக்கு அந்த சமயத்தில் பழைய நினைவுகளும் இல்லை. அதன் பிறகு வெஸ்னாவின் காயங்கள் ஆறத்தொடங்கின. பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு வெஸ்னா எழுந்து நடக்கத் தொடங்கினார். அதன் பின் ஒரு வருடம் கழித்து பழைய நிலைமைக்குத் திரும்பிய வெஸ்னா மீண்டும் அதே விமான நிறுவனத்தில் அலுவலக வேலைக்குச் சேர்ந்தார்.
30,000 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்து உயிர் பிழைத்த இளம்பெண் என்று கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றார் வெஸ்னா. அந்த கொடூர நினைவுகளொடு தனது காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த வெஸ்னா 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அந்த விமானம் வெடித்தது விபத்து அல்ல, ஒரு தீவிரவாத அமைப்பினர் வைத்த வெடிகுண்டு என்று அந்த சம்பவத்திற்குப் பின்னால் தெரிய வந்தது.