Connect with us

HISTORY

கைத்தடியை வைத்து குகையையே தோண்டிய சாது? வெள்ளைக்காரனை ஆச்சரியத்தில் மூழ்க வைத்த தரமான உண்மை சம்பவம்!

பட்டப்படிப்பை விட அனுபவ கல்வியே சிறந்தது என்று ஒரு சொல் வழக்கு உண்டு. அதற்கு உதாரணமாக வரலாற்றில் நடந்த ஒரு ஆச்சரிய சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

1864 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த சமயத்தில், சிம்லாவை கோடைக்காலத் தலைநகரமாக அறிவித்தனர். அறிவித்தால் மட்டும் போதுமா? பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் சிம்லாவிற்கு பயணம் செல்வதற்கு ஒரு முறையான வழித்தடம் வேண்டுமே. அந்த காலகட்டத்தில் சிம்லாவிற்குச் செல்ல முறையான வழித்தடம் இல்லை. பாதைகள் மிகவும் சிக்கலான ஒன்றாகவும் கடினமான ஒன்றாகவும் இருந்தது.

   

ஆதலால் பிரிட்டிஷார் சிம்லாவிற்கு ரயில் விடலாம் என முடிவு செய்தனர். ஆனால் அந்த பாதை மலைப்பாதை என்பதால் அங்குள்ள மலைப்பாறைகளை பிளந்து குகையாக ஆக்கி அதன் பிறகுதான் தண்டவாளம் அமைக்க முடியும். ஆதலால் அதற்கான பணிகளை தொடங்கியது பிரிட்டிஷ் அரசு.

முதலில் டெல்லியில் இருந்து கால்கா என்ற இடம் வரை ரயில் பாதை போடப்பட்டது. இந்த பாதையை மிகவும் எளிமையாக உருவாக்கிவிட்டார்கள் பிரிட்டிஷார். ஆனால் கால்காவில் இருந்து சிம்லா வரையிலான மலைப்பாதைதான் அவர்களுக்கு சவாலாக இருந்தது.

பல மலைப்பாறைகளை குடைந்து குகைகளாக ஆக்கி ரயில்பாதை போடவேண்டும். மிகப்பெரிய கடின உழைப்பை வேண்டியிருந்த இந்த பணிகளை பல நூறு தொழிலாளர்கள் வெள்ளைக்கார எஞ்சினியர் ஒருவரின் தலைமையில் தொடங்கினார்கள். ஆனால் குகைகளை உருவாக்குவதில் தவறுகள் நிகழ்ந்தது. இதனால் பிரிட்டிஷ் அரசின் பணம் வீணானது.

இதனால் இந்த திட்டத்தில் எஞ்சினியராக இருந்த பாரோக் என்பவருக்கு பிரிட்டிஷ் நீதிமன்றம் அதிகளவு தொகையை அபராதமாக விதித்தது. இந்த அபராத தொகையை கட்ட முடியாததால் தற்கொலை செய்துகொண்டார் பாரோக்.

அதன் பின் ஹாரிங்க்டன் என்ற எஞ்சினியர் தலைமையில் இந்த பணிகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அவருக்கு இந்த பணியை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. மலைப்பாதைக்காக சரியான முறையில் குகையை தோண்ட வேண்டும். ஆனால் ஹாரிங்கட்னுக்கு தலைகால் புரியவில்லை. ஹாரிங்க்டன் அவ்வாறு திணறிக்கொண்டிருந்த சமயத்தில்தான் பால்கு ராம் என்ற சாது ஹாரிங்க்டனுக்கு அறிமுகமானார்.

பால்கு ராம் ஒரு வயதான சாது. அந்த மலைப்பகுதியில் பல வருடங்களாக ஆடு மேய்த்து வந்தவர். அந்த மலைப்பகுதியில் உள்ள மூலை முடுக்கெல்லாம் அவருக்கு அத்துப்பிடி. தனது அனுபவ அறிவை கொண்டு அந்த சாது, தனது கைத்தடியை வைத்து மலைப்பாறையை தட்டி பார்த்தார். ஒவ்வொரு முறை அவர் தட்டும்போதும் அந்த பாறை ஒலி எழுப்பியது. அந்த ஒலியை வைத்தே கணக்கிட்டு “இந்த இடத்தில் தோண்டுங்கள், அந்த இடத்தில் தோண்ட வேண்டாம்” என்று எஞ்சினியருக்கு ஆலோசனை கூறினார்.

அவரின் ஆலோசனையின் பெயரில் அவர் சொன்ன இடத்தில் குகை தோண்டப்பட்டது. அந்த ரயில்பாதைக்கு ஏற்றவாறு அந்த குகை அமைந்தது. இதனை பார்த்த வெள்ளைக்கார எஞ்சினியரும் தொழிலாளர்களும் வியந்துபோனார்கள்.

அதன் பின் பால்கு ராமின் ஆலோசனையின் பெயரில் 103 குகைகள் தோண்டப்பட்டன. அதன் பின் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு ஒரு வழியாக சிம்லாவிற்கு ரயிலும் விடப்பட்டது. இவ்வாறு தனது கைத்தடியை வைத்து அதிசயம் செய்த பால்கு ராமிற்கு 1903 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராயாக இருந்த கர்சன் பதக்கம் தந்து பால்குவை கௌரவித்தார். கடந்த 2011 ஆம் ஆண்டில் சிம்லாவில் தொடங்கப்பட்ட ஒரு ரயில் அருங்காட்சியகத்திற்கு பால்கு ராமின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in HISTORY

To Top