கடற்கரைகளில் கரை ஒதுங்கிய கால்கள்! அமானுஷ்யத்தையும் மிஞ்சிய மர்மங்கள்! கேட்கவே பகீர் கிளப்புதே!

By Arun

Updated on:

கடற்கரைகளில் இறந்துபோன பிணங்கள் கரை ஒதுங்குவது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இங்கே வெறும் கணுக்கால்கள் மட்டுமே கரை ஒதுங்குகிறது. அதுவும் அந்த கணுக்கால்கள் ஸ்போர்ட்ஸ் ஷூவுடன் கரை ஒதுங்குகின்றன. இதுதான் அமானுஷயத்தையும் மிஞ்சிய பயத்தை கிளப்புகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள ஜெடீடியா தீவில் உள்ள கடற்கரையில் ஒரு பெண் நடந்துகொண்டிருந்தபோது கடலில் இருந்து கரை ஒதுங்கி கிடந்த ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூவை பார்க்கிறார். வலது காலினுடைய அந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை அந்த பெண் தனது கையில் எடுத்துப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார். அந்த ஷூவினுள் ஒரு மனித கணுக்கால் வெட்டப்பட்டது போல் உள்ளே கிடந்தது.

   

இந்த சம்பவம் இதோடு நிற்கவில்லை. ஆறு நாட்கள் கழித்து கபோரியா தீவில் உள்ள ஒரு கடற்கரையில் இரண்டாவதாக ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ கணுக்காலுடன் கரை ஒதுங்கியது. அதன் பின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வால்டெஸ் தீவில் ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ வலது கணுக்காலுடன் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கரை ஒதுங்கியது. அதன் இடது கணுக்கால் அதே ஆண்டு இரண்டு மாதங்கள் கழித்து கரை ஒதுங்கியது.

இவ்வாறு 2007 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அமெரிக்காவின் வாஷிங்க்டன் ஆகிய கடற்கரை பகுதிகளில் 19 ஷூக்கள் கணுக்காலுடன் கரை ஒதுங்கியது. ஒவ்வொரு ஷூ கரை ஒதுங்கும்போதும் போலீஸாருக்கு தலை சுற்றியது. சில ஷூக்களில் உள்ள கணுக்கால் யாருடையது என்று போலீஸார் தங்களுடைய விசாரணையில் கண்டுபிடித்தனர்.

அவர்கள் கடலுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டவர்களாகவோ அல்லது தள்ளிவிட்டு கொலையானவர்களாகவோ இருந்தார்கள். மீதி உள்ளவர்கள் அதே போல் கடலில் விழுந்து தற்கொலையோ அல்லது தள்ளிவிடப்பட்டு கொலையோ செய்யப்பட்டு இருக்கலாம். சரி, அது ஏன் கனடா மற்றும் அமெரிக்காவின் குறிப்பிட்ட கடல் தீவுகளில் மட்டும் கரை ஒதுங்குகின்றன? 2007க்கு முன் இது போன்ற சம்வங்கள் எல்லாம் நடக்கவில்லையே? போன்ற கேள்விகள் உருக்கொண்டன.

ஆனால் உண்மையாகவே சொல்ல வேண்டுமென்றால் 1887 ஆம் ஆண்டிலேயே வான்கூவர் என்ற கடற்கரையில் ஒரு ஷூ பாதத்துடன் கரை ஒதுங்கி இருக்கிறது. மேலும் 1914 ஆம் ஆண்டும் ஒரு ஷூ கரை ஒதுங்கியிருக்கிறது.

இவ்வாறு பாதங்களுடன் கரை ஒதுங்கிய அனைத்தும் ஸ்போர்ட்ஸ் ஷூக்களாக இருப்பதும் மர்மமாகவே இருந்தது. இந்த சம்பவங்களுக்கு பல கதைகள் உருவானது. அதாவது ஒரு சீரியல் கில்லர் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருக்கும் ஆட்களை எல்லாம் கொன்று கடலில் தூக்கி எறிந்து வருகிறான். அந்த உடலை திமிங்கலங்களோ சுறாக்களோ சாப்பிடுகின்றன. ஷூவை அதனால் சாப்பிட முடியாது என்பதால் ஷூவுடன் மிஞ்சியிருக்கும் கணுக்காலும் சேர்ந்து கரை ஒதுங்குகிறது என்று கூறினார்கள். அதே போல் ஒரு கும்பல் இவ்வாறு பலரையும் கொன்று கடலில் தூக்கி எறிகின்றது என்றும் கூறினார்கள்.

ஆனால் சில நிபுணர்கள் உண்மைக்கு நெருக்கமான சில அனுமானங்களையும் முன்வைத்தனர். கடலில் விழுந்து இறந்தவர்களை கடல் வாழ் உயிரினங்கள் தின்றுவிடுகின்றன. அதன் மிச்சம்தான் கரை ஒதுங்குகின்றது. ஏன் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மட்டும் மேலே வருகின்றது என்றால், நவீன ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் அனைத்தும் எடை குறைவாகவும் நீரில் மிதக்கும்படியும் தயாரிக்கப்படுபவை. இந்த ஷூக்களில் காற்றுப் பைகள் இருக்கிறது. அதனால்தான் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் மட்டும் மேலே வருகின்றன.

சரி, ஏன் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பசிபிக் பெருங்கடலை சேர்ந்த கடற்கரைகளில் மட்டும் இது கரை ஒதுங்குகின்றது? பசிபிக் பெருங்கடலில் உள்ள நீரோட்டத்தின் தன்மையாக இருக்கலாம் என்று பதில் வந்தது. இது விஞ்ஞானப்படி ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில்தான் என்றாலும் இதற்கான மர்மம் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் கூட பசிபிக் கடற்பகுதிகளில் பல ஷூக்கள் கரை ஒதுங்கி இருக்கலாம், அதனை யாரும் இன்னும் கண்டெடுக்கவில்லை, அதனால் வெளிச்சத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

author avatar