Connect with us

HISTORY

இந்திய தேசிய கொடியை தயாரித்தவர் இவர்தானா? மூவர்ணக் கொடிக்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருக்கா?

இந்தியாவின் அடையாளமாக திகழும் மூவர்ணக் கொடியை இந்தியராக பிறந்த அனைவரும் நேசித்து வருகிறோம். அது மட்டுமல்லாது மூவர்ணக் கொடி உயரே பறக்கும் கம்பீரத்தை பார்க்கும்போது ஒவ்வொருவரும் நமது தேசத்தை இதயத்தில் சுமக்கும் உணர்வு ஏற்படும். இவ்வாறு ஒவ்வொரு இந்தியர்களின் உணர்வுகளில் கலந்திருக்கும் மூவர்ணக்கொடியை தயாரித்தவர் யார் என்ற செய்தி நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.

   

இந்திய தேசிய விடுதலை போராட்டத்தை பொறுத்தவரை பற்பல அமைப்புகளாக திரண்டு பலரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர். அதில் ஒன்றுதான் “இந்தியா ஹவுஸ்”. இந்த அமைப்பு லண்டனில் இயங்கி வந்தது. இதில் வீர சாவர்ககர், வ.வே.சு.ஐயர் ஆகியோர் முக்கியமான போராளிகளாக இருந்தனர். அவர்களின் ஆலோசனைப்படி மேடம் காமா என்ற பெண் புரட்சியாளர் 1907 ஆம் ஆண்டு ஜெர்மனில் நடந்த சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில் இந்திய தேசிய கொடி ஒன்றை பறக்கவிட்டார். அதில் மேலே பச்சை, கீழே சிகப்பு, நடுவில் மஞ்சள் என்று மூன்று பட்டைகள் இருந்தன.

பச்சையில் 8 தாமரை மலர்களும் சிகப்பில் ஒரு பிறை நிலாவும் சூரியனும் மஞ்சள் பட்டையில் வந்தே மாதரம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து 1917 ஆம் ஆண்டு திலகரும் அன்னி பெசன்ட் அம்மையாரும் ஒரு தேசிய கொடியை வடிவமைத்தனர். அதில் ஐந்து சிகப்பு நிற பட்டைகளும் நான்கு பச்சை நிற பட்டைகளும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு தேசிய கொடியை அவரவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொண்டனர்.

ஆனால் 1921 ஆம் ஆண்டுதான் இப்போதுள்ள தேசிய மூவர்ணக் கொடியின் ஆரம்ப வடிவமைப்புத் தொடங்கியது. ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கய்யா என்ற தையல் கலைஞர் ஒரு தேசிய கொடியை உருவாக்கினார். இவர் ஒரு சிறந்த கல்வியாளர். இவர் வடிவமைத்த கொடியில் மேலே வெள்ளையும் கீழே சிகப்பும், அதற்கு கீழே பச்சையும் இருந்தது.

அவர் வடிவமைத்த கொடியை நேராக காந்தியிடம் சென்று காட்டினார். மகாத்மா காந்தி பிங்காலி வெங்கய்யாவை பாராட்டி சில யோசனைகளை கூறினார். அதன் பின் காந்தியின் யோசனைப்படி பிங்காலி வெங்கய்யா மேலே சிகப்பு, நடுவில் வெள்ளை, கீழே பச்சை என்று வடிவமைத்துக் கொடுத்தார். வெள்ளை பட்டையில் காந்தியின் கைராட்டையும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதன் பின் அந்த கொடியை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொண்டது. அதனை தொடர்ந்து  1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அதே கொடியில் நடுவில் வெள்ளைப் பட்டையில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டு தற்போது இருக்கும் இந்திய தேசியக் கொடியாக உருமாறியது.

Continue Reading

More in HISTORY

To Top