உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு சாட்சியாக நின்றுகொண்டிருக்கும் இந்த தாஜ் மஹால் மீது வரலாற்று காலத்தில் பலரும் கண் வைத்திருக்கின்றனர். ஆனால் பிரிட்டிஷார் ஒரு படி மேலேயே போய் தாஜ்மஹாலை விற்று அந்த காசை கிழக்கிந்திய கம்பெனியின் கருவூலத்தில் சேர்க்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
1826 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பர்மாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தது. இந்தியாவில் இருந்து வரும் வருமானத்தை வைத்துதான் அவர்கள் பர்மாவில் ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க முடிந்தது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தால் நன்றாகவே சமாளிக்கலாமே என்று அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங் கணக்குப் போட்டார்.
அதன் படி அவர் ஆக்ரா கோட்டையில் உள்ள திவான்-இ-காஸ் என்ற மாளிகையில் உள்ள மார்பிள் கற்களை ஒவ்வொன்றாக உருவி விற்கத் தொடங்கினார். ஆனால் அந்த கற்களை விற்று அவர் பெரிதாக கல்லா கட்டமுடியவில்லை. மிகவும் சொற்ப காசுகளே தேறியது. இன்னும் அதிகளவு காசு தேற்ற என்ன செய்யலாம்? என்று சிந்தித்தபோது அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தாஜ்மஹாலை ஏன் ஏலத்துக்கு விடக்கூடாது? என்பதுதான் அந்த யோசனை.
அதன் படி 1831 ஆம் ஆண்டு வில்லியம் பென்டிங் தாஜ்மஹாலை ஏலம் விடுவதாக அறிவித்தார். அந்த சமயத்தில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சேத் லட்சுமிகாந்த் என்பவர் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். அவர் தாஜ்மஹாலை இரண்டு லட்ச ரூபாய்க்கு கேட்டார். ஆனால் இது மிகவும் சொற்ப பணம் என்று நினைத்த வில்லியம் பென்டிங் அந்த ஏலத்தை ரத்து செய்தார்.

William Bentinck
அதன் பின் 1832 ஆம் ஆண்டு மீண்டும் தாஜ்மஹாலை ஏலம் விடுவதாக அறிவித்தார் பென்டிங். மீண்டும் சேத் லட்சுமிகாந்தே தாஜ்மஹாலை வாங்க முன் வந்தார். இப்போது அவர் ஏழு லட்சத்திற்கு தாஜ்மஹாலை கேட்டார். ஆனால் அதற்குள் பென்டிங் தாஜ் மஹாலை ஏலத்திற்கு விடப்போகும் செய்தி ஆக்ரா மக்களிடையே பரவியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ஆக்ரா மக்கள் கொதித்து எழுந்தனர். குறிப்பாக தாஜ் மஹால் கட்டப்பட்ட சமயத்தில் கட்டிட வேலை பார்த்த தொழிலாளர்களின் சந்ததிகள் அதிகளவில் கொந்தளித்தனர்.
அதன் பின் இந்த விவகாரம் பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை சென்றது. இந்த விவகாரத்திற்கு பதில் அளித்த பிரிட்டிஷ் பாராளுமன்றம், “இந்த முட்டாள்தனமாக காரியத்தை முதலில் நிறுத்துங்கள்” என்று வில்லியம் பென்டிங்கை கண்டித்தது. அதன் பிறகுதான் தாஜ்மஹாலை விற்கும் யோசனையை கைவிட்டார் வில்லியம் பென்டிங். தாஜ்மஹாலும் தப்பி பிழைத்தது.