தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர் தூக்குத் தண்டனை என்பது அநாவசியமானது, மனித தன்மையற்றது என்று கருத்து கூறுகின்றனர். வேறு சிலர், “தண்டனைகள் கடுமையானால்தான் தவறுகள் குறையும்” என்று தூக்குத் தண்டனையை ஆதரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் முதன்முதலில் சட்டப்படி தூக்குத்தண்டனை பெற்ற முதல் நபரை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம். கிழக்கிந்திய கம்பெனி வங்காளத்தை ஆண்டுகொண்டிருந்த சமயத்தில் மகாராஜா நந்தகுமார் என்று ஒருவர் இருந்தார். இவர் கம்பெனி ஆட்சிக்கு கீழ் வரி வசூலிப்பவராக பணியாற்றி வந்தவர். 1764 ஆம் அண்டு வங்காளத்தின் பர்ட்வான், ஹூக்ளி, நாடியா போன்ற பகுதிகளில் இவரை வரி வசூலிப்பவராக நியமித்தனர் கிழக்கிந்திய கம்பெனியினர்.
கம்பெனிக்கு மிகவும் விசுவாசமான வேலைக்காரராக இருந்து வந்தார் நந்தகுமார். அந்த நிலையில் 1773 ஆம் ஆண்டு வங்காளத்தின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹாஸ்டிங்கிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார் நந்தகுமார். மேலும் அதற்கு சாட்சியாக வாரன் ஹாஸ்டிங்க்ஸின் ஒரு கடிதமும் தன்னிடம் சாட்சியாக இருப்பதாக நீதிமன்றத்தில் கூறி வந்தார்.
ஆனால் அந்த வழக்கில் நீதிபதி எலிஜா இம்பே அளித்த தீர்ப்பு நந்தகுமாருக்கு பாதகமாக அமைந்தது. அதாவது நந்தகுமார் பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார் எனவும் அந்த கடிதம் கூட நந்தகுமார் வாரன் ஹாஸ்டிங்கின் மதிப்பை கெடுக்க வேண்டும் என்று நந்தகுமாரால் எழுதப்பட்ட பொய்யான கடிதம் என்றும் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வந்தது.
நந்தகுமார் இவ்வாறு மோசடி செய்துள்ளதால் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டு நந்தகுமாரின் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. 1775 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 5 ஆம் தேதி இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Warren Hastings
ஆனால் வாரன் ஹாஸ்டிங்கும் நீதிமதி எலிஜா இம்பேவும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் எனவும் இந்த தீர்ப்பு இருவரால் திட்டமிடப்பட்ட சட்டபடியான ஒரு கொலை எனவும் பின்னாளில் சர்ச்சை எழுந்தது. இவ்வாறு இரண்டு பிரிட்டிஷார்களின் சதியால் ஒரு இந்தியர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.