இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவில் நதிநீர் பங்கீடு என்பது எப்போதுமே மிக முக்கியமான மற்றும் உணர்வுபூர்வமான ஒரு விவகாரமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற காரணங்களால் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்துடனான கங்கை நதிநீர் ஒப்பந்தம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான 30 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கை நதிநீர் ஒப்பந்தம், வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளிடையேயான நதிநீர் அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அங்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேசத் தேசியவாத கட்சி (BNP) அரசு, இந்த ஒப்பந்தத்தை மையமாக வைத்து இந்தியாவுக்கு மறைமுக அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய BNP பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர், இந்தியாவுடனான நல்லுறவின் நீட்சி என்பது கங்கை நதிநீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதைப் பொறுத்தே அமையும் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஃபராக்கா அணையால் கோடைக் காலத்தில் தங்களுக்குப் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்பதும், இதனால் தங்களின் வாழ்வாதாரமும் விவசாயமும் பாதிக்கப்படுவதாகவும் வங்கதேசம் நீண்டகாலமாகக் குற்றம் சாட்டி வருகிறது. வங்கதேச மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த நதியை நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிருப்தியின் உச்சகட்டமாக, ஃபராக்கா அணையின் தாக்கத்தைச் சமாளிக்க வங்கதேசம் தன் நாட்டுப் பகுதிக்குள் பத்மா (கங்கை) நதியின் குறுக்கே 2033ஆம் ஆண்டுக்குள் ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டும் புதிய மெகா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது தங்களின் தேசிய நலன் சார்ந்தது என்பதால், இத்திட்டம் குறித்து இந்தியாவுடன் எந்த ஆலோசனையும் நடத்தத் தேவையில்லை என்று வங்கதேச நீர்வளத்துறை அமைச்சர் ஷாஹிதுதீன் சௌத்ரி அதிரடியாகக் கூறியுள்ளார். மேலும், நீண்டகாலமாக இழுபறியில் இருக்கும் தீஸ்தா நதிநீர் ஒப்பந்த விவகாரத்திலும், மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதிய மாநில அரசுடன் நெருக்கமான உறவை வளர்த்து, சாதகமான தீர்வைப் பெற வங்கதேசம் ஆர்வம் காட்டி வருகிறது.
வங்கதேசத்தின் இந்த அதிரடி நகர்வுகள் மற்றும் கருத்துகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 54 ஆறுகள் ஓடுவதாகவும், இது குறித்துப் பேச முறையான இருதரப்பு கூட்டமைப்பு அமைப்புகள் உள்ளதால், அவை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில், பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். கங்கை நதி வங்கதேசத்திற்கு வாழ்வாதாரமாக இருந்தாலும், இந்தியாவின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக அணை கட்டத் துணிந்திருப்பது இருநாட்டு உறவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…