2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டு தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால், திமுகவின் ரகசிய ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகும் எடப்பாடி பழனிசாமியின் கனவும் பலிக்கவில்லை; தவெக அமைச்சரவையில் இடம்பெற நினைத்த வேலுமணி அணியின் முயற்சியும் நிறைவேறவில்லை. இந்தச் சூழலில், வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் மீண்டும் எடப்பாடி அணியிலும், சிலர் தவெகவிலும் மாறி மாறி இணைந்து வருகின்றனர்.
அதிமுகவில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரின் அணிகள் மீண்டும் இணையப் போவதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்குள் கட்சியில் புதிய புயல் வெடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தலைமைச் செயலகத்திலேயே தவெகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். ‘எடப்பாடி அணியா அல்லது வேலுமணி அணியா’ என்ற பஞ்சாயத்தில், இருவருமே வேண்டாம் என்ற விரக்தியடைந்த நிலையில் அதிமுகவில் பல எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி வெளியிட்ட அதிர்ச்சித் தகவலில், ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்களைத் தவெக தலைமை தங்கள் கட்சியில் சேர்க்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களைத் தவிர்த்து அதிமுகவைச் சேர்ந்த சுமார் 10 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் தற்போது தவெகவின் நேரடிப் பிடியில் உள்ளதாகவும், சட்டமன்றத்தில் தங்களது தனிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக தொடர்ந்து இழுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அடுத்தடுத்து ராஜினாமா செய்யவிருக்கும் இந்த எம்.எல்.ஏ.க்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் இந்த மெகா ஆபரேஷனுக்குப் பின்னணியில் தவெக அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவர் மட்டுமே முன்னின்று செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவர் மூலமாகவே தவெகவில் இணைய விரும்பும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கட்சி மாறத் தயாராக இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் பேசி, அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் மற்றும் முக்கியப் பதவிகள் குறித்து இந்த இரு அமைச்சர்களும் தவெக தலைமை சார்பில் ரகசியமாகப் பல வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே அடுத்தடுத்து இந்த அதிரடி ராஜினாமக்களும் கட்சித் தாவல்களும் அரங்கேறி வருவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…