கே பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகும் அவரை மூன்று முடிச்சு மற்றும் அவர்கள் ஆகிய படங்களில் நடிக்கவைத்தார். ஆனால் அனைத்துமே வில்லன் வேடம்தான்.
ஆனாலும் அந்த வில்லன் வேடங்களிலேயே ரசிகர்களை ரஜினியை ரசிக்க வைத்தார் பாலச்சந்தர். ரஜினி வில்லனாக நடித்த சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக கைதட்டல் வாங்கும் அளவுக்கு ரஜினியின் நடிப்புத் திறன் இருந்தது,
அப்படி ஒரு படம்தான் மூன்று முடிச்சு. இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகிய மூவரும் நடித்திருந்தனர். இந்த படத்தைத் தொடங்கும்போதே பாலச்சந்தரிடம் இரண்டு பொய்களை சொல்லியுள்ளார் ரஜினிகாந்த். அது என்னவென்றால் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் கார் ஓட்டுவது போன்றும், நீச்சல் அடிப்பது போன்றும் காட்சிகள் இருந்துள்ளன. இவை இரண்டும் தெரியுமா என பாலச்சந்தர் கேட்டுள்ளார். ரஜினி தெரியும் என பொய் சொல்லிவிட்டார்.
கண்டக்டராக இருந்திருந்தாலும் அப்போது ரஜினிக்கு நான்கு சக்கர வாகனங்கள் சரிவர ஓட்டவே தெரியாதாம். ஏற்காட்டில் ரஜினி காரை ஓட்டிக்கிட்டு கேமராவை பார்த்து வர வேண்டும். ஷாட் ஆரம்பித்ததும் ஏதோ ஒரு நம்பிக்கையில் ரஜினி காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நிலைதடுமாறிய கார் ஒரு பாறையில் முட்டி நின்றதாம். அப்போது காரிலேயே மயங்கியுள்ளார். அதன் பின்னர் அவருக்கு முதலுதவி கொடுத்துள்ளனர். அதன் பிறகுதான் ரஜினி கார் ஓட்டக் கற்றுக்கொண்டாராம்.
அதே போல ஏரியில் விழுந்த குழந்தையை ரஜினி காப்பாற்றுவது போன்ற காட்சி. பாலசந்தர் ஆக்ஷன் சொன்ன அசட்டு தைரியத்தில் தண்ணீருக்குள் குதித்திருக்கிறார். நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் அவர் தவிக்க அதைப் பார்த்த படக்குழுவினர் அவருக்கு நீச்சல் தெரியாது என்பதைப் புரிந்துகொண்டு தண்ணீரில் குதித்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.