தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.
50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
இதில் மற்ற பாடல் ஆசிரியர்களுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசமே கண்ணதாசன் இசையமைப்பாளர் பாடல் மெட்டை சொன்னதுமே வரிகளை மழை போல கொட்டுவார் என்பதுதான். எந்தவொரு மெட்டுக்குமே அவர் வீட்டுக்கு எடுத்து சென்று பாடல் எழுதியதில்லை என்பதுதான். கண்ணதாசனின் பாடல் எழுதும் வேகத்தை இளையராஜா பல மேடைகளில் விதந்தோதி பேசியுள்ளார்.
இளையராஜா அறிமுகமான 1976 ஆம் ஆண்டில் இருந்தே அவரோடு பல படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். அது மட்டுமில்லை கண்ணதாசனின் கடைசி பாடலுக்கு இசையமைத்தவரும் இளையராஜாதான். அப்போது கண்ணதாசனுக்கு மிகவும் உடல்நலம் குன்றியிருந்த நேரம். அதனால் அமெரிக்காவுக்கு சிசிச்சைக்கு செல்ல இருந்தார்.
செல்வதற்கு முதல் நாள் காலையில் விசு படத்துக்கு சென்று ஒரு பாடல் எழுதியுள்ளார். அதன் பின்னர் மதியம் பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை படத்துக்காக ஒரு பாடலை எழுத வேண்டுமென அழைத்துள்ளனர். அவரும் சென்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த பாடல்தான் காலத்தால் அழியாத ‘கண்ணே கலைமானே’ பாடல்.
பாடல் எழுதி முடித்து செல்லும் போது இளையராஜாவிடம் கண்ணதாசன் “நீ ரொம்ப அதிர்ஷ்டக் காரன்டா” என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற கண்ணதாசன் உயிரோடு இந்தியா திரும்பவேயில்லை. அதனால் தன்னுடைய சாவை முன்பே உணர்ந்துதான் தன்னுடைய கடைசி பாடலை இளையராஜாவுக்காக எழுதியதைக் குறிப்பிட்டு அவரை “அதிர்ஷ்டக்காரன்” என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்த தகவலை கண்ணதாசனின் மகன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.