மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் வேதனையை பகிர்ந்திருக்கின்றார் .மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் சன்லைட் கிரியேஷன் சார்பில் எம் செல்வராஜ் தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் கன்னி.
இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜெபஸ்டின் சதீஷ் இசையமைத்திருக்கின்றார். மே 17ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடைபெற்றது.
இதில் திரைப்பட விநியோகிஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் கே ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய கே ராஜன் கூறியதாவது: “கன்னி என்கின்ற அற்புதமான தலைப்பு. இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது தம்பி மாயவன் சிவா தொரப்பாடி அவரிடம் ஏகப்பட்ட திறமை நிறைந்துள்ளது. அவர் வைத்திருக்கின்ற கதை, தமிழ் பாரம்பரியம், கலாச்சாரம், தமிழ் பண்பாடு அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
ஒரு காலத்தில் சித்தமருத்துவம் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போது அப்படி இல்லை. இந்தத் திரைப்படத்தில் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி பேசியிருப்பதால் தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவில் நடக்கக்கூடிய சில அவலத்தை பற்றி நான் சொல்ல வேண்டி உள்ளது. தமிழ் பண்பாடு என்றால் ஒருவனுக்கு ஒருத்தி. அதேபோல் தமிழ் திரை உலகில் பல பேர் காதலித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு உதாரணம் எங்கள் பாக்கியராஜ். தமிழ்நாட்டு ரசிகர்கள் நடிகர்களை பின்பற்றுகிறார்கள். நடிகர்கள் கிழிந்த பேண்ட் போட்டால் அவர்களும் கிழித்துக்கொண்டு பேண்டை போடுகிறார்கள். தலைகீழாக நடந்தால் ரசிகர்களும் தலைகீழாக நடக்கிறார்கள். ரசிகர்களில் இப்படி நடிகர்களை பின்பற்றாதீர்கள். போன மாதம் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.
தமிழக மக்களிடம் அது பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு இப்படி பிரிந்து போகிறோம் என்றால் அந்த குழந்தைகளின் நிலை என்ன, அந்த பெண்ணைப் பெற்ற உலகம் அறிந்த மாபெரும் தலைவன். அவரது மனது எப்படி வேதனைப்படும். இப்போது பார்த்தல் ஜிவி பிரகாஷ், சைந்தவி நல்ல பெண் எனது உணர்ச்சிகள் படத்திற்கு முதல் பாடலை பாடினர்.
நல்ல ஒழுக்கமான அருமையான பெண். காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். காதலிக்கும் போது மனதை முழுமையாக புரிந்து கொண்டு தான் காதலிக்கிறார்கள். கல்யாணத்திற்கு பிறகு ஏன் அது கசந்து போகின்றது. விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை. இப்போது சாஃப்ட்வேர் கம்பெனிகளில் 15 நாளில் காதல், ஒரு மாதம் வாழ்க்கை, மூன்றாவது மாதம் விவாகரத்து என நீதிமன்றம் செல்கிறார்கள் என்று தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிகழும் விவாகரத்து குறித்து வேதனையுடன் பேசி இருந்தார் கே ராஜன்.