இந்தியாவில் நடந்த டம்மி தேர்தல்! கட்சி சின்னங்கள் கொண்டுவரப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா? ஒரு சுவாரஸிய தகவல்!

By Arun

Published on:

இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் இன்று நடந்து முடிந்துள்ள நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை கொஞ்சம் பார்க்கலாம்.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவிற்கென ஒரு அரசியல் சட்டம் இயற்றப்படும் வரை இடைக்கால அரசு இந்தியாவை ஆட்சி நடத்தும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதில் ஜவஹர்லால நேரு இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   

1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் ஜனவரி 26, அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசியலமைப்பு சட்டத்தின்படி சாதி, மதம், இனம் போன்ற பாகுபாடுகள் இன்றி இந்தியாவில்  21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதுதான் பெரிய பாடாக இருந்தது.

ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்கள் 80% பேர். அவர்களுக்கு தேர்தலைப் பற்றி புரியவைப்பதே பெரும் தலைவலியாக இருந்தது. அதற்கும் மேல் பெரிய சவாலாக இருந்தது என்னவென்றால், வாக்காளர் பட்டியலை சேகரிப்பதுதான். வாக்காளர் பட்டியலை சேகரிக்க இந்தியாவின் நகரங்களில் இருந்து மூலைகளில் உள்ள கிராமங்கள் வரை அதிகாரிகள் நடையோ நட என்று சென்று வாக்காளர் பட்டியலை தயார் செய்தனர்.

ஆனால் அன்றைய மக்களிடம் “உங்களது பெயர் என்ன?” என்று கேட்டால் பலரிடமும் ஜாதிப் பெயரோ குலப் பெயரோதான் அவர்களின் வாயில் இருந்து வெளிவந்தது. பெண்கள் அதற்கும் மேல். அதாவது அவர்களின் தகப்பன் பெயர் அல்லது கணவனின் பெயர் மட்டுமே அவர்களின் வாயில் இருந்து வெளிவந்ததே தவிர வட இந்தியாவில் பெண்கள் தங்கள் பெயர்களை கூறவே தயங்கினார்கள். இந்த தடைகளையும் சவால்களையும் தாண்டி ஒரு வழியாக வாக்காளர் பட்டியல் தயார் ஆனது. மொத்தம் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 17 கோடியாக அன்று கணக்கிடப்பட்டது.

எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கு வாக்களிக்க சொல்லித்தர வேண்டுமே? அதற்காக வானொலிகள், திரையரங்குகள், தண்டோராக்கள் என பல மீடியாக்களை இந்திய அரசு பயன்படுத்திக்கொண்டது. தேர்தல் என்றால் என்ன? அதன் நடைமுறை என்ன? எப்படி வாக்களிப்பது போன்ற காணொளிகள் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் ஒளிபரப்பபட்டன.

சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுகுமார் சென், எழுதப் படிக்க தெரியாத பாமர மக்கள் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை அறிவித்தார். அவ்வாறு அறிமுகமானதுதான் தேர்தல் சின்னங்கள். அதே போல் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  மக்கள் நேரடியாக தேர்தலை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு டம்மி தேர்தலும் நடத்தப்பட்டது.

இவ்வாறு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய பிறகு 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 முதல் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை 489 மக்களவை தொகுதிகளுக்கும் அன்றைய மாகாணங்களின் 4,500 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேர்தல் மிகவும் பாதுகாப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 45% வாக்குப்பதிவானது குறிப்பிடத்தக்கது. 487 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றிபெற்றது. இடைக்கால அரசின் பிரதமராக இருந்த நேரு, இப்போது மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

author avatar