உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். எனினும் உலகம் முழவதிலும் மறுபிறவியாக பிறந்தவர்களின் உண்மை சம்பவங்கள் பல நிறைந்து கிடக்கின்றன. அவர்கள் இன்னொருவரின் மறுபிறவிகள் என்று நம்பவும்படுகிறது. அந்த வகையில் உலகையே உலுக்கிய ஒரு உண்மை மறுபிறவி கதையைத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
1954 ஆம் ஆண்டு ஸ்வீடனில் பிறந்த பெண் பார்பரோ கர்லென். இவர் தனது மூன்றாவது வயதில் “நான் பார்பரோ இல்லை, எனது பெயர் ஆன் பிராங்” என்று சொல்லத்தொடங்கினார். அவரது பெற்றோர்கள் “இவள் என்ன இப்படி உலறிக்கொண்டிருக்கிறாள்” என்றுதான் முதலில் நினைத்தனர். ஆனால் உண்மையை அறிந்த பிறகு பார்பரோவின் பெற்றோர்கள் அதிர்ந்துபோனார்கள்.

Barbro Karlen
1929 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்த பெண் ஆன் பிராங்க். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு ஹிட்லரின் படை யூத குடும்பங்களைத் தேடி தேடி கொலை செய்து வந்தது. ஆதலால் ஆன் பிராங்கின் குடும்பம் ஹாலந்தில் தஞ்சமடைந்தது. ஆனால் துர்திஷ்டவசமாக ஹிட்லரின் படை ஹாலந்தையும் கைப்பற்றியது.
ஆதலால் ஆன் பிராங்க் தனது குடும்பத்துடன் ஒரு சிறிய கட்டடத்தில் மறைந்து வாழ வேண்டி இருந்தது. அந்த சமயத்தில் ஆன் பிராங்க் தனது ஆசைகள் குறித்தும் கனவுகள் குறித்தும் ஒரு டைரியில் எழுதத் தொடங்கினார். மேலும் ஹிட்லர் படைகள் மேற்கொள்ளும் கொடூரமான காரியத்தை குறித்தும் அதனால் உண்டான பயம் நிறைந்த சூழல் குறித்தும் எழுதினார். ஆனால் ஒரு கட்டத்தில் ஆன் பிராங்கின் குடும்பமும் ஹிட்லர் படையிடம் சிக்கியது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வதை முகாம்களுக்கு அனுப்பினார்கள். இதில் ஆன் பிராங் 1945 ஆம் ஆண்டு காய்ச்சல் காரணமாக ஒரு வதைமுகாமில் இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 16. ஆன் பிராங்க் எழுதி வைத்திருந்த டைரியை போருக்கு பின் வதைமுகாமில் இருந்து வெளிவந்த ஆன் பிராங்கின் தந்தை புத்தகமாக பிரசுரித்து வெளியிட்டார். அந்த புத்தகம் உலகின் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை ஆனது. தமிழிலும் கூட மொழிமாற்றம் செய்யப்பட்டது.

Anne Frank
இப்போது பார்பரோ கதைக்கு வருவோம். பார்பரோ தனது மூன்றாவது வயதில் “எனது பெயர் ஆன் பிராங்க். நீங்கள் எனது பெற்றோர் கிடையாது” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். “இவள் ஏதோ உலறுகிறாள்” என்றுதான் அவரது பெற்றோர் நினைத்தனர். ஆனால் திரும்ப திரும்ப பார்பரோ அதையே சொல்லிக்கொண்டிருக்க பார்பரோவை அவரது பெற்றோர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மருத்துவர் “இவளுக்கு ஒன்றும் இல்லை. சும்மா குழந்தைத்தனமாக விளையாடுகிறாள்” என்று வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பார்பரோவிற்கு பள்ளி செல்லும் வயது வந்தது. அப்போது பள்ளியில் அவரது ஆசிரியர் ஒருவர் ஆன் பிராங்கை பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அதனை பார்த்துக்கொண்டிருந்த பார்பரோ “என்னை பற்றி இவருக்கு எப்படி தெரியும்?” என்று யோசிக்கத் தொடங்கினார். அதன் பிறகுதான் பார்பரோவிற்கு விஷயம் தெரிய வந்திருக்கிறது.
அதாவது ஆன் பிராங்க் எழுதிய டைரி குறிப்புகள் ஸ்வீடன் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டு விமரிசையாக விற்பனை ஆகி வருகிறது என்று பார்பரோவிற்குத் தெரிய வந்தது. இதன் பிறகு “நான்தான் ஆன் பிராங்க்” என்று சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை என்று நினைத்த பார்பரோ “இனிமேல் நாம் இந்த விஷயத்தை மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வோம்” என்று முடிவுசெய்துவிட்டார்.
ஆனால் பார்பரோவிற்கு பத்து வயது ஆன போது அவரது பெற்றோர் அவரை ஹாலந்திற்கு விடுமுறைக்காக அழைத்துச்சென்றனர். ஹாலந்திற்கு வந்திறங்கியதுமே ஆன் பிராங்கை மீண்டும் உயிர்ப்பித்தார் பார்பரோ. முன் ஜென்மத்தில் ஆன் பிராங்காக இருந்த நினைவுகள் நிஜமாக அவரது கண்முன்னே தெரிந்தது.
ஹாலந்தில் ஹிட்லர் படையிடமிருந்த தப்பிக்க ஆன் பிராங்க் தனது குடும்பத்தினருடன் ஒளிந்து வாழ்ந்த வீட்டை நினைவிடமாக ஆக்கியிருந்தனர். அந்த வீட்டிற்கு தனது பெற்றோரை பார்பரோவே அழைத்துச் சென்றார். அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் பார்பரோ அந்த வீட்டில் “இந்த பொருள் நான் இருந்தபோது இங்கே இல்லை மாற்றிவிட்டார்கள் போல, இந்த அறையில் நிறைய மாறியிருக்கிறது. இந்த அறையில் நான் இருந்தபோது என்ன நடந்தது தெரியுமா?” என்றேல்லாம் பேசத் தொடங்கிவிட்டார். அதன் பிறகுதான் “ஒரு வேளை உண்மையிலேயே நமது மகள் ஆன் பிராங்கின் மறுபிறவியாக இருப்பாளோ” என்று அவரது பெற்றோர் நினைக்கத் தொடங்கினார்கள்.
அதன் பிறகு பார்பரோ ஆன் பிராங்கின் உறவினர் ஒருவரிடம் பேசினார். பல மணி நேரம் பேசிய பிறகு அந்த உறவினர் “நிச்சயமாக பார்பரோ ஆன் பிராங்கின் மறு பிறவிதான்” என்று கூறினார். அதன் பின் பலரும் ஆன் பிராங்கின் மறுபிறவிதான் பார்பரோ என நம்பத் தொடங்கினார்கள். இந்த செய்தி உலகையே உலுக்கிப்போட்டது. இதெல்லாம் எப்படி சாத்தியம் என விஞ்ஞானிகள் இப்போதுவரை குழம்பிப்போய்தான் இருக்கின்றனர்.