சப்பாத்திகளை வைத்து பிரிட்டிஷாரை குலை நடுங்கவைத்த இந்தியர்கள்? இது வேற லெவல் சம்பவமா இருக்கே!

By Arun

Published on:

பிரிட்டிஷாரை துப்பாக்கிகளையும் வேல்கம்புகளையும் அகிம்சையையும் கொண்டு எதிர்த்த வரலாற்றை நாம் படித்திருப்போம். ஆனால் சப்பாத்திகளை கொண்டு பிரிட்டிஷாரை பீதியடைய வைத்த சம்பவத்தை பலரும் அறிந்திருக்க மாட்டோம்.

1857 ஆம் ஆண்டு வாக்கில் வட இந்தியாவின் மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு விநோதமான வழக்கம் உண்டானது. அதாவது ஒரு கிராமத்தின் காவலாளி தனது தலைப்பாகைக்குள் இரண்டு சப்பாத்திக்களை வைத்துக்கொண்டு விறுவிறுவென நடந்து அடுத்த கிராமத்தில் இருக்கும் காவலாளியிடம் அந்த சப்பாத்திகளை அவர் ஒப்படைப்பார்.

   

அதன் பின் அந்த காவலாளி அந்த சாப்பாத்திகளை இன்னொரு ஊரின் காவலாளியிடம் ஒப்படைப்பார்கள். இவ்வாறு பல காவலாளிகளிடம் இருந்து பல சப்பாத்திகள் பரிமாறப்பட்டன. இந்த பரிமாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியாத பிரிட்டிஷார் குழம்பிப்போயினர்.

இந்த சப்பாத்தி பரிமாற்றம் விரிவடைந்துகொண்டே போனது. பிரிட்டிஷாரின் போலீஸ் படையைச் சேர்ந்த இந்தியர்கள் கூட இந்த சப்பாத்தி பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த சப்பாத்தி பரிமாற்றத்தில் எதுவும் பிரிட்டிஷாருக்கு எதிரான குறியீடு இருக்கிறதா? என்று பல பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த சப்பாத்திகளை பிடுங்கி ஆய்வுகளை நடத்தினார்கள். ஆனால் அந்த சப்பாத்திகளில் எதுவும் எழுதப்படவும் இல்லை சந்தேகத்திற்குரிய எந்த ஒரு விஷயமும் அதில் இல்லை.

ஆனால் இந்த சப்பாத்திகள் பரிமாறப்படுவது பிரிட்டிஷாரின் தூக்கத்தை கெடுத்தது. இதற்கு சப்பாத்தி இயக்கம் என்ற பெயரும் காலப்போக்கில் வந்து சேர்ந்துகொண்டது. சப்பாத்திகள் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஏதோ ஒரு ரகசிய செய்தியும் பரிமாறப்படுகிறது என்று பிரிட்டிஷார் நினைத்தனர். ஆதலால் சப்பாத்தியை கொண்டு போகும் காவலாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

அந்த காவலாளிகளை விசாரித்தபோது, “எங்களை பக்கத்து கிராமங்களுக்கு சென்று சப்பாத்தியை கொடுக்கச்சொன்னார்கள். நாங்கள் செய்தோம். அவ்வளவுதான். பிரிட்டிஷ் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் இது நடக்கிறது என்று நாங்கள் நினைத்தோம். அதனால்தான் எந்த கேள்வியும் கேட்காமல் இதனை செய்து வருகிறோம்” என்று பதில் கூறி பிரிட்டிஷாரையே அதிர வைத்தனர். ஆனால் உண்மையில் இதுவரை இந்த சப்பாத்தி பரிமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

சில வரலாற்றாசிரியர்கள், பஞ்ச காலத்தில் மழை வருவதற்கான ஐதீகமாக இந்த சப்பாத்தி பரிமாறப்படுகிறது என்று கூறுகின்றனர். சிலர் எதாவது ஆபத்து நெருங்கி வருவதாக தெரிந்தால் சப்பாத்திகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் பரிமாற்றப்பட்டு அதன் மூலம் அந்த ஆபத்து செய்தியை எச்சரிக்கும் எண்ணத்தோடு கொண்டு போகும் வழக்கம் இருந்தது என்றும் கூறுகின்றனர். காரணம் எது என்று தெரியாவிட்டாலும், பிரிட்டிஷார் இந்த “சப்பாத்தி இயக்கத்தை” பார்த்து அரண்டுபோயிருந்தனர் என்பது மட்டும் உண்மையே.

author avatar