கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

By Arun on மே 3, 2024

Spread the love

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக கிடைக்கும். ஆனால் காலங்காலமாக ஆவியை நேரில் பார்த்ததாக கூறும் மனிதர்களும் உண்டு. குறிப்பாக இந்தியாவில் உண்மை பேய் கதைகள் என்று சொல்லப்படும் பல கதைகள் நமது மண்ணில் உலாவி வருகின்றன.

அந்த வகையில் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமம் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேல் ஆள் நடமாட்டம் இல்லாமல் காலியாகவே இருக்கிறது. அவர்கள் தங்கியிருந்த வீடுகள் சிதிலமடைந்துவிட்டன. 150 வருடங்களுக்கு முன்பு  ஒரு நாள் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த அனைத்து மக்களும் அந்த கிராமத்தை விட்டு காலி செய்து பக்கத்து கிராமங்களுக்கு குடிபோய்விட்டனர். அப்படி அந்த கிராமத்தில் என்ன நடந்தது என்று தேடிப் பார்த்தால் பல அமானுஷ்ய சம்பவங்கள்தான் நமக்கு விடையாக கிடைக்கின்றன.

   

   

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் என்ற பகுதியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிராமம்தான் குல்தாரா. 13 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தானின் வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இந்த இடத்திற்கு வந்து குடியேறி குல்தாரா கிராமத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

 

ராஜஸ்தான் ஒரு பாலைவனப் பகுதி. அப்படி இருந்தும் அந்த கிராமத்தை உருவாக்கியவர்கள் மிகப்பெரிய வளத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள். பல தலைமுறைகளாக அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் 19 ஆம் நூற்றாண்டில் திடீரென காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

அப்படி அங்கு என்னதான் நடந்தது? இந்த கேள்விக்கு பல பதில்கள் விடையாக கிடைத்தாலும் அனைத்தும் அனுமானங்களாகவே இருக்கின்றன. அதாவது ராஜஸ்தான் பகுதியை ஆண்டு வந்த ஒரு மன்னர், அந்த கிராமத்திற்கு வந்தபோது  அந்த கிராமத் தலைவரின் மகளை பார்த்திருக்கிறார். அந்த பெண்ணை மன்னருக்குப் பிடித்துப்போக, “உனது மகளை எனக்கு கல்யாணம் செய்து வை, இல்லை என்றால் உனது கிராமத்திற்கு அதிக வரி விதித்துவிடுவேன்” என மிரட்டியிருக்கிறார்.

அந்த கிராமத் தலைவனுக்கும் கிராமத்து மக்களுக்கும் அந்த பெண்ணை மன்னருக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை. ஆனால் மன்னரை எதிர்த்து நம்மால் பேசமுடியாது என்ற காரணத்தாலும், பெண்ணை கொடுக்கவில்லை என்றால் மன்னர் நிச்சயம் நமது கிராம மக்களை துன்புறுத்த நேரிடும் என்ற பயத்தாலும் அந்த ஊர் மக்கள் அந்த கிராமத்தை காலி செய்துவிட்டதாக ஒரு கதை இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, அந்த கிராம மக்கள் அங்கு ஒரு அம்மனுக்கு கோவில் கட்டியிருக்கின்றனர். அந்த கிராம மக்கள் செய்த ஒரு குற்றம் தெய்வ குற்றமாக ஆகிப்போய் அம்மனின் கோபத்திற்கு ஆளாகி விட்டார்களாம். ஆதலால் அந்த அம்மன் அந்த கிராம மக்களுக்கு அருள் பாலிக்கவில்லை. அதனால் அந்த ஊருக்குள் பேய்கள் குடிபுகுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களுக்கு எந்த வித சான்றுகளும் இல்லை. எனினும் இந்த கிராமத்தில் பஞ்சம் வந்திருக்கக்கூடும், அதனால் இந்த கிராம மக்கள் வெவ்வேறு கிராமங்களுக்கு குடி பெயர்ந்திருக்க கூடும் என்று சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இப்போது அந்த குல்தாரா கிராமத்தில் இருக்கும் வீடுகள், மாளிகைகள், கோவில்கள் என அனைத்துமே சிதிலமடைந்து உள்ளது. மேலும் அந்த கிராமத்திற்குள் இரவில் யாராவது தங்கினால் அவர்களுக்கு பேய் பிடித்துவிடும் எனவும் நம்பப்படுகிறது.

இந்த கிராமம் இப்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. இரவில் இந்த கிராமத்தைச் சுற்றி அமானுஷ்யங்கள் நிலவும் என்று கூறப்பட்டாலும் பகலில் இந்த கிராமம் ஒரு சுற்றுலாத் தளமாக இருக்கிறது. இந்த கிராமத்திற்கு சுற்றுலாவிற்கு வருகிற மக்கள் தங்குவதற்கு ஏற்றார் போல் குல்தாராவிற்கு அருகில் உள்ள கிராமங்களில்ப் பல தங்கும் விடுதிகளும் முளைத்துள்ளன.

ஆனால் இரவில் இந்த கிராமத்திற்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. யாராவது இரவில் இந்த கிராமத்திற்குள் செல்ல வேண்டும் என விரும்பினால் அதற்கு இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரவேண்டும். இதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் கார்த்தி நடிப்பில் வெளிவந்த “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தின் சில காட்சிகள் இந்த குல்தாரா கிராமத்தில்தான் படமாக்கப்பட்டது. அதுவும் தொல்லியல் துறையிடம் அனுமதி வாங்கி இரவிலும் பல காட்சிகளை படமாக்கியிருக்கின்றனர்.