Connect with us

CINEMA

இந்த காரணத்தால்தான் வடிவேலு வரவில்லை, விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வடிவேலு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்குமார்..

நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகையர் பலரும் கலந்துக்கொண்டு விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். அப்போது நடிகர் சரத்குமார் பேசியதாவது, கடந்த 1990ம் ஆண்டில் நடிகர் விஜயகாந்தை புலன் விசாரணை படப்பிடிப்பில் சந்திக்கிறேன்.

   

ஆர்கே செல்வமணி டைரக்டர். ராவுத்தரும் இருக்கிறார். அப்போது அந்த படத்தில் வில்லனாக நடிக்க ஆள் தேடிக்கொண்டு இருக்கின்றனர். என்னை பார்த்தவுடன், இவர் மீசை இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என, கேப்டன் இருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்து, ஒரு சலூன் கடைக்குச் சென்று மீசையை எடுத்துவிட்டு அவர் முன் மீசையில்லாமல் போய் நின்றேன். இப்போதும் மீசை இல்லாமல்தான் நிற்கிறேன். ஆனால் அவர் முகத்தை என்னால் நேரில் பார்க்க முடியவில்லை.

இங்கே 3 நிமிடங்கள் மட்டுமே என்னை பேச சொன்னார்கள். ஆனால் அவரை பற்றி 3 தலைமுறைகள் பேசலாம். ஏனெனில் அவரை போன்ற நல்ல மனம், வள்ளல் குணம், அன்பு, அரவணைப்பு, மரியாதை, பாசம் எல்லாம் பாடங்களாக கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடம் கோபம் இருக்கும். அதே இடத்தில் நிறைய குணங்களும் இருக்கும். புலன்விசாரணை படப்பிடிப்பில் எனக்கு அடிபட்ட போது 4 நாட்கள் ஓய்வு எடுக்க சொன்னார்கள்.

அப்போதே நான் வலிக்கு ஊசி போட்டு விட்டு ஷூட்டிங் வந்த போது, விஜயகாந்த் என்னை திட்டினார். ஆனால் படம் வந்த பிறகு, இந்த படத்தில் உங்களுக்கு தான் பெரிய பெயர் கிடைக்கும் என்றார். அதே போல் நடந்தது. எந்த ஹீரோவும் ஒரு புதுமுக வில்லன் நடிகரிடம் இப்படி சொல்லவே மாட்டார்கள். அதே போல் கேப்டன் பிரபாகரன் படம் வந்த போதும், மன்சூர் அலிகான் இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்படுவார் என்று விஜயகாந்த் கூறினார்.

கேப்டன் பிரபாகரன் படம் எடுத்த போது எனக்கு கழுத்தில் அடிபட்டு இருந்தது. எனக்காக 6 மாதங்கள் வரை காத்திருந்து அந்த படத்தை எடுத்தார்கள். சரத்குமார் வந்து நடித்தால்தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கண்டிப்பாக விஜயகாந்த் கூறிவிட்டார். அவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருந்த போது, நான் பொதுச் செயலாளராக இருந்தேன். அவரை நிர்வாக திறமையை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

வடிவேலு வரவில்லையே, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னை கேட்டார்கள். நான் சொன்னேன், வடிவேலு வீட்டில் உட்கார்ந்து இவரை நினைத்து அழுதிருக்கலாம். மனித இயல்புதானே. வரமுடியலையேன்னு நினைச்சிருப்பார். வந்தால் வேறு ஏதாவது சொல்வார்களா, திட்டுவார்களா என நினைச்சிருக்கலாம். அதனால் மறப்போம், மன்னிப்போம் என்ற மனம் படைத்த விஜயகாந்த், இதெல்லாம் பெருசா எடுத்திருக்க மாட்டார். அதனால் வடிவேலு நிச்சயம் அழுதிருப்பார் என்றுதான் நான் சொன்னேன். விஜயகாந்தை போன்ற வள்ளல்கள் எப்போதும் வாழ்வார்கள் என்று சரத்குமார் பேசினார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top