சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

By vinoth on வைகாசி 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி, சுஹாசினி, ரேவதி மற்றும் தற்போதைய சுதா கொங்கரா வரை பல பெண்கலைஞர்கள் சாதித்திருந்தாலும் அவர்களின் பங்களிப்பு இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனராக இத்துறையில் கால்பதித்தவர் நடிகை டி பி ராஜலட்சுமி ஆவார். சினிமா ராணி என்ற பட்டத்தோடு நடிப்பில் முன்னணியில் இருந்த இவர் 1936 ஆம் ஆண்டு வெளியான ’மிஸ் கமலா’ என்ற படத்த இயக்கியதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பெண் இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

   

டி பி ராஜலட்சுமியின் சொந்த வாழ்க்கை பல கஷ்டங்களால் நிறைந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாலியமங்கலம் எனும் ஊரில் பிறந்த அவருக்கு 11 வயதிலேயே குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் அவர்களின் குடும்பத்தால் ஒப்பந்தப்படி வரதட்சணை தரமுடியவில்லை என்பதால் அவர் பெற்றோர் வீட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டார்.

   

நாடகத்துறையில் பிரபலமான அவர் பின்னர் தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய சக நடிகரான டி வி சுந்தரத்தை மணந்துகொண்ட அவருக்கு 1936 ஆம் ஆண்டு கமலா என்ற பெண் குழந்தை பிறந்தது. அந்த ஆண்டுதான் அவர் இயக்கிய மிஸ் கமலா படமும் உருவானது. தன் குழந்தையின் பெயரால்தான் அந்த படத்துக்கும் அவர் மிஸ் கமலா என்ற பெயர் சூட்டினார். அந்த படமும் வலிமையான பெண் கதாபாத்திரத்தைக் கொண்ட பெண்ணிய படமாக உருவானது. ஆனால் இப்போது அந்த படம் காணக் கிடைக்கவில்லை.

 

பல படங்களை தயாரித்த டி பி ராஜலட்சுமி பல படங்களைத் தயாரித்ததால் ஒரு கட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தார். எந்த அளவுக்கு என்றால் 1961 ஆம் ஆண்டு அவருக்கு தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த விழாவுக்கு போய் அதைப் பெற்றுத் திரும்புவதற்கு அவரிடம் கார் கூட இல்லையாம். இந்த தகவல் எம் ஜி ஆர் காதுக்கு எட்டவே உடனடியாக அவருக்கு காரனுப்பி அவரை கௌரவமாக விருது விழாவுக்கு அனுப்பி வைத்தாராம்.