“கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா இது” என்ற எம்.ஆர்.ராதாவின் மிகப் பிரபலமான வசனத்தை நாம் மறந்துவிட முடியாது. சினிமா, ஓவியம், எழுத்து, நாடகம், கூத்து போன்ற கலைவடிவங்கள் மனிதர்களின் நாகரீக வளர்ச்சியில் இன்றியமையாத ஒன்றாகும். இதில் குறிப்பாக ஓவியம் என்பது உலகளாவிய கலைகளில் தனித்துவம் பெற்றுள்ள ஒன்றாகும்.
அவ்வாறு உலகின் மிகச் சிறந்த ஓவியரின் பிறந்தநாளைதான் நாம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 ஆம் தேதி உலக கலை தினமாக கொண்டாடுகிறோம். அந்த புகழ்பெற்ற ஓவியரின் பெயர்தான் லியோனர்டோ டாவின்சி.
மோனலிசா, லாஸ்ட் சப்பர் போன்ற பல புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தவர்தான் லியோனர்டோ டாவின்சி. இவர் பிறந்ததினமான ஏப்ரல் 15 ஆம் தேதியை நாம் உலக கலை தினமாக கொண்டாடுகிறோம்.
மேலும் நமது வாழ்வில் கலைஞர்களின் உன்னதமான பங்களிப்பையும் கலையின் முக்கியத்துவத்தையும் மதிக்கும் விதமாக நாம் கலை தினத்தை கொண்டாடுகிறோம்.
உலக கலை தினம் முதலில் 2011 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற சர்வதேச கலை சங்க மாநாட்டில் முன்மொழியப்பட்டது. அந்த மாநாட்டில் லியோனர்டா டாவின்சியின் பிறந்தநாளில் உலக கலை தினத்திற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. சகோதரத்துவம், உலக அமைதி, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் அடையாளமாக லியோனர்டா டாவின்சி இந்த நாளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் படி 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி உலகின் முதல் கலை தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு வருடமும் உலகில் வாழும் அனைத்து கலைஞர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.