அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மைல்கல் என்றால் அது ரயில்கள்தான். முதன்முதலில் இந்தியாவில் பிரிட்டிஷார் ரயில் எஞ்சின்களை இயக்கியபோது, இந்திய மக்களுக்கு தலைகால் புரியவில்லை. நம் கண்முன்னே நடப்பது என்ன? என்று அவர்கள் அசந்துபோனார்கள்.
யானை அளவுக்கு இருந்த நீராவி எஞ்சின்களைப் பார்த்து பல இந்தியர்கள் பயந்து நடுங்கியதாக கூட வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் குறித்த சில சுவாரஸ்ய சம்பவங்களை குறித்து நாம் பார்க்கலாம்.
பிரிட்டிஷார்கள் பருத்தியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யத்தான் முதன்முதலில் தண்டவாளத்தை உருவாக்கினார்கள். அதாவது இந்தியாவில் அதிக இடங்களில் பருத்தி அமோகமாக விளைந்தது. அந்த பருத்தியை மூட்டை மூட்டையாக ரயிலில் அள்ளிக்கொண்டு வந்து துறைமுகங்களில் இறக்கி அங்கிருந்து கப்பல்களில் பிரிட்டனுக்கு கொண்டு செல்லத்தான் பருத்தி விளையும் இடங்களில் இருந்து துறைமுகங்கள் வரை தண்டவாளங்கள் போடப்பட்டன.
அதன் பின் பல பொருட்களை இடப்பெயர்வு செய்வதற்காக ரயில்களை பயன்படுத்தினார்கள் பிரிட்டிஷார்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் பயணிகள் ரயிலும் தொடங்கப்பட்டது. அதாவது பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் பயணம் செய்யவேண்டும் என்ற முக்கிய நோக்கத்திற்காகத்தான் பயணிகள் ரயில் உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாகத்தான் இந்தியர்கள் பயணம் செய்தார்களாம்.
1845 ஆம் ஆண்டு கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின் இந்தியாவில் ரயில் தண்டவாளங்கள் அமைக்க கம்பெனியினர் பல திட்டங்களை தீட்டினார்கள். அதன் படி பிரிட்டிஷார் முதலில் ஹௌரா-ஹூக்ளி, தானே-பம்பாய் ஆகிய வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்கலாம் என முடிவு செய்தனர்.
அதற்காக தண்டவாளம் போடும் பணிகளும் நிறைவேறியது. எனினும் நீராவி எஞ்சின்களை பிரிட்டனில் இருந்து இந்தியா கொண்டு வருவதுதான் அவர்களுக்கு பெரும்பாடாக இருந்தது. லண்டனில் இருந்து கல்கத்தா நோக்கி எஞ்சின்களுடன் புறப்பட்ட கப்பல்கள் வழிமாறி வேறு எங்கோ போய்விட்டன. சில கப்பல்கள் கடலுக்குள் எஞ்சின்களுடன் கவிழ்ந்தது. ஆதலால் கல்கத்தா பகுதியில் திட்டமிடப்பட்ட ஹூக்ளி-ஹௌரா வழித்தடம் காலதாமதமானது.
ஆனால் லண்டனில் இருந்து பம்பாய் துறைமுகத்தை நோக்கி எஞ்சின்களுடன் கிளம்பிய கப்பல்கள் பத்திரமாக வந்து சேர்ந்தன. பல தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து மிகப் பெரிய உழைப்புடன் அந்த நீராவி எஞ்சின்களை கப்பல்களில் இருந்து இறக்கிக்கொண்டு வந்தனர். அதை பார்த்த இந்தியர்கள் அரண்டுப்போனார்கள்.
பிரிட்டிஷார் திட்டமிட்டப்படி 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் பம்பாயின் போரி பந்தர் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் தானேவை நோக்கி கிளம்பியது. இந்தியர்கள் பலரும் அதனை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் ரயில் செல்லும்போது அதன் பின்னாலேயே ஓடினார்களாம்.
இந்தியாவின் முதல் ரயில் கிளம்பியபோது 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கியது. பம்பாயில் இருந்து கிளம்பிய ரயில் 55 நிமிடங்கள் கழித்து தானேவை வந்தடைந்ததாக வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் முதல் ரயிலின் முதல் நாள் பயணத்தில் ஆங்கிலேய அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பயணம் செய்தனர். அந்த ரயிலில் முதல் வகுப்பு கட்டணம் ரூ 2 10 அணாவாக இருந்தது. இரண்டாம் வகுப்பு கட்டணம் 1 ரூபாய் 1 அணாவாக இருந்தது. மூன்றாம் வகுப்புக்கு 5 அணாவாக கட்டணம் இருந்தது. இந்த முதல் ரயிலுக்கு Falkland என்று பெயர் வைத்தனர் பிரிட்டிஷார். Falkland என்பவர் அந்த சமயத்தில் பம்பாய் கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தானே-பம்பாய் வழித்தடத்தில் பயணித்த இந்தியாவின் முதல் ரயில் இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவமாக ஆகிப்போனது.