நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத ஆச்சாரங்களை ஆதரித்தும் முதலாளித்துவத்தை ஆதரித்தும் பேசுபவர்களை வலதுசாரி என்று முத்துரை குத்துவார்கள்.
தொழிலாளர் நலன், சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு போன்றவற்றை குறித்து பேசுபவர்களை இடதுசாரி என்று முத்திரை குத்துவார்கள். இந்த இரண்டு வார்த்தைகளும் இந்தியாவில் உருவான வார்த்தைகள் இல்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு சம்பவம்தான் இந்த வார்த்தைகளை உருவாக்கியது.
அதற்கு முன் நாம் பிரெஞ்சு புரட்சியை குறித்து சுருக்கமாக பார்த்துவிடலாம். 18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை ஆண்டு வந்த பதினைந்தாம் லூயி என்ற மன்னர் மிகப் பெரும் கொடுங்கோலனாக இருந்தார். நாட்டு மக்களின் மீது எந்த கவலையும் இல்லாமல் செல்வத்தை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே ஆட்சி நடத்தினார். இதனால் விவசாயிகளும் தொழிலாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களின் மீது அதிக வரி வசூலிக்கப்பட்டது.
நிலப்பிரபுக்களும் மத போதகர்களும் அதிக சலுகைகளை அனுபவித்தனர். ஆனால் ஏழை எளிய மக்கள் பசியால் வாடினார். பொருட்களின் விலையும் அதிகமானதால் பஞ்சமும் தலை விரித்தாடியது. அதன் பின் பதினாறாம் லூயி மன்னர் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த நிலை நீடிக்க, 1789 ஆம் ஆண்டு மக்களிடையே புரட்சி வெடித்தது. இந்த புரட்சியால் பிரான்ஸில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.
புரட்சி வெடித்த சமயத்தில் பிரான்ஸ் மன்னர் லூயிக்கு மக்களிடையே எந்தளவு அதிகாரம் இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு சபை கூடியது. அதில் மன்னரின் ஆட்சியை கடவுளின் ஆட்சி போல் ஏற்றுக்கொள்ள வேண்டும், மதத்தின் பழமையான பழக்க வழக்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று மன்னராட்சியையும் பழமைவாதத்தையும் ஆதரித்தவர்கள் எல்லாம் அந்த சபையின் வலது பக்கத்தில் நின்றார்கள். மன்னராட்சிக்கு இனிமேல் கட்டுபட முடியாது, இனி சுதந்திரமே குறிக்கோள் என்று முற்போக்காக யோசித்த, மன்னராட்சிக்கு எதிராக இருந்தவர்கள் அந்த சபையின் இடதுபக்கம் நின்றார்கள்.
இந்த பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால் உலக மக்களிடையே சுதந்திரம் என்ற தாகம் அதிகமானது. பல நாடுகளில் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் வெடித்தன. அவ்வாறுதான் மன்னராட்சிக்கு ஆதரவாகவும் பழமைவாதத்திற்கு ஆதரவாகவும் இருந்தவர்களை வலதுசாரிகள் என்றும், முற்போக்கு சிந்தனை உடையவர்களை இடதுசாரிகள் என்றும் வகைப்படுத்தத் தொடங்கினார்கள்.