எம் ஜி ஆரின் பல வருட செண்ட்டிமெண்ட்டை உடைத்த சரோஜாதேவி… அதன் பிறகு இணையாத ஜோடி… அப்படி என்ன செய்தார் தெரியுமா?  

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

எம் ஜி ஆரை அப்போது எதிர்த்து பேசும் அதிகாரம் பெற்றிருந்தவர்கள் சின்னப்ப தேவர், நடிகை பானுமதி மற்றும் நடிகர் எம் ஆர் ராதா உள்ளிட்ட சிலர்தான் பெற்றிருந்தார்கள். கதாநாயகிகளை பொறுத்தவரை ஒரு கட்டத்துக்கு மேல் தொடர்ந்து அவர்கள் தன் படங்களில் இருப்பதை எம் ஜி ஆர் விரும்பமாட்டார்.

   

ஏனென்றால் அந்த ஜோடி ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால்தான். அப்படிதான் சரோஜா தேவி, ஜெயலலிதா, லதா, உள்ளிட்ட சில ஹீரோயின்கள் ஒரு கட்டம் வரை தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வந்தனர். இதில் ஜெயலலிதாதான் அவரோடு அதிக படங்களில் நடித்தவர். இருவரும் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் சரோஜா தேவியை மட்டும் தனக்குப் பொருத்தமான ஜோடி என்று அவர் நினைத்தார் போல. ஏனென்றால் அவரை தன்னுடைய 25 படங்களில் கதாநாயகியாக நடிக்கவைத்தார். ஆனால் இந்த ஜோடி அரசகட்டளை படத்தோடு முடிவுக்கு வந்தது. அதற்குக் காரணம் எம் ஜி ஆருக்கு செண்ட்டிமெண்ட்டான விஷயம் ஒன்றை சரோஜா தேவி உடைத்ததுதானாம்.

எம்.ஜி.ஆருக்கு தினமும் காலை படப்பிடிப்பு துவங்கும் போது முதல் காட்சியில் அவர்தான் நடிக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இதை பல வருடங்களாக அவர் பின்பற்றி வந்துள்ளார். ஆனால் அரசகட்டளை ஷூட்டிங்கின் போது ஒரு நாள் அவசரமாக ஹைதராபாத் செல்ல வேண்டும் என சொல்லி சரோஜாதேவி முதல் காட்சியில் நடித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டார்.

இதைத் தெரிந்த எம் ஜி ஆர் கோபமாகி ‘ஏன் இப்படி செய்தீர்கள்’ என அவர் தயாரிப்பாளரிடம் கேட்க அவரோ எனக்கு உங்கள் செண்ட்டிமெண்ட் பற்றி எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளாட். தன்னுடைய இந்த செண்ட்டிமெண்ட் சரோஜா தேவிக்கு நன்றாக தெரிந்திருந்தும் ஏன் அவர் இப்படி செய்தார் என்ற கோபத்தில் அதன் பின்னர் அவரை தன்னுடைய படங்களில் நடிக்க வைக்கவேயில்லையாம்.