சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

By vinoth on மே 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன.

பாலு மகேந்திரா முதல் முறை இயக்குனர் அவதாரம் எடுத்த கோகிலா படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசன்தான் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைந்த மூன்றாம் பிறை திரைப்படம் இன்றளவும் திரைப்பட ரசிகர்களால் சிலாகிக்கப்படும் ஒரு படமாக உள்ளது.

   

இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு உதவுதற்காக கமல்ஹாசன் சதிலீலாவதி படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்தார். வழக்கமான பாலு மகேந்திரா படங்கள் போல இல்லாமல் இந்த படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டது.

   

இந்த படத்தில் கமல்ஹாசன் சக்திவேல் எனும் மருத்துவராக கொங்கு தமிழ் பேசி அசத்தியிருப்பார். அவருக்கு இணையாக நகைச்சுவையில் கலக்கியிருப்பார் கோவை சரளா. இருவரும் சேர்ந்து க்ளைமேக்ஸ் காட்சியில் அடிக்கும் லூட்டி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்கவைத்த ஒன்று.

 

ஆனால் இந்த படத்தில் அந்த வேடத்துக்கு முதலில் கமல்ஹாசன் – கோவை சரளா ஜோடியை பாலு மகேந்திரா தேர்ந்தெடுக்கவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு நாசர் மற்றும் ஊர்வசியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். பின்னர் ஊர்வசிக்கு பதிலாக கோவை சரளாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் நாசரால் அந்த படத்தில் நடிக்க முடியாததால் கமல்ஹாசனே துணிந்து அந்த வேடத்தில் நடிக்க முன்வந்துள்ளார்.

முன்னணி நடிகரான கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் நகைச்சுவை நடிகையான கோவை சரளாவுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து பலரும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் கமல் அந்த வேடத்துக்கு நானும் கோவை சரளாவும் சரியாக இருப்போம் எனக் கூறி பிடிவாதமாக இருந்து நடித்துள்ளார். படம் வெளியான பின்னர் அவர்களின் ஜோடி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.