மகாத்மா காந்திக்கு முன்னாடியே இவர்தான் மகாத்மாவா இருந்தார்? பெண்களுக்கான முதல் பள்ளியை திறந்த சமூக நீதிப்போராளியின் உண்மை வரலாறு…

By Arun

Published on:

சமூகநீதிக்கு போராடியவர்கள் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர்கள் அம்பேத்கரும் பெரியாரும்தான். ஆனால் அவர்களுக்கு முன்பே மகாராஷ்டிரா மாநிலத்தில் பகுத்தறிவோடும் சமத்துவத்தை பேணும் எண்ணத்தோடும் ஒருவர் போராடிக்கொண்டிருந்தார். அவர்தான் இந்தியாவின் முதல் மகாத்மாவாகவும் திகழ்ந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் லால்கன் என்ற சிறிய கிராமத்தில் 1827 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோதிராவ் புலே. இவர் மாலி என்ற தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். சாதிய ஏற்றத்தாழ்வுகளும் தீண்டாமை கொடுமைகளும் தாண்டவமாடிய அந்த காலகட்டத்திலும் பல தடைகளை எதிர்த்து உயர்நிலை வகுப்பு வரை பயின்றார்.

   

தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்ததால் உயர் ஜாதியினரால் பல தீண்டாமை கொடுமைக்கு ஆளானார்  புலே. சாதிய ஏற்றுத்தாழ்வுகளை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தர், பசவண்ணா போன்ற புரட்சியாளர்களை குறித்து படித்தார். சாதிய ஒடுக்குமுறையை அழிக்க கிளம்பினார்.

அந்த காலகட்டத்தில் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் படிப்பதற்கும், கோவிலுக்குள் நுழைவதற்கும், பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எல்லாம் எதிர்த்து போராட 1873 ஆம் ஆண்டு சத்ய சோதக் சமாஜ் என்ற அமைப்பை தொடங்கினார்.

அனைவருக்கும் கல்வி, தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்டல், விதவை மறுமணம் போன்ற பல சீர்த்திருத்த செயல்பாடுகளை தொடங்கினார். இதனால் அவரை உயர் ஜாதியினர் பலரும் வெறுத்தனர். அவரை மிகவும் அவமானப்படுத்தினர். ஆனால் ஜோதிராப் புலே எதற்கும் பயம் கொள்ளாமல் தன்னுடைய செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தார்.

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான பள்ளியை 1848 ஆம் ஆண்டு தொடங்கினார். இந்தியாவிலேயே பெண் கல்விக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட் பள்ளி இதுதான். “பெண் பிள்ளைக்கு எதற்கு கல்வி?” என்று உயர் ஜாதியினை சேர்ந்தவர்கள் கொந்தளித்தனர். அவரது பள்ளியின் மீது கற்களை கொண்டு எரிந்தனர்.

அந்த பள்ளிக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பல உயர்குடி ஆசிரியர்களையும் மிரட்டினர். ஒரு கட்டத்தில் ஆசிரியர்கள் எல்லாம் மரண பயத்தில் வேலையை விட்டு போக, தனது மனைவியான சாவித்திரிபாய்க்கு படிப்பு சொல்லிக்கொடுத்து அவரையே ஆசிரியையாக நியமித்தார். ஒரு முறை இவரை அடியாளை கொண்டு அடிக்க பலரையும் ஏவிவிட்டனர் உயர் ஜாதியினர். ஆனால் தன்னை அடிக்க வந்தவர்களையே திருத்தினார் அவர்.

1888 ஆம் ஆண்டு புனேயில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மக்கள் இவருக்கு மகாத்மா என்ற பட்டத்தை அளித்தனர். பல சமூக சீர்த்தங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த ஜோதிராவ் புலே 1890 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி மரணமடைந்தார்.

author avatar