மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது. 74-வது வார்டு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர், அண்மையில் நடந்த தேர்தல் தோல்வி குறித்தும், கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆவேசத்துடனும் வெளிப்படையான ஆதங்கத்துடனும் உரையாற்றினார்.
மதுரை மேற்கு தொகுதியில் கடந்த ஓராண்டு காலத்தில் பூங்காக்கள் அமைத்தது, மீனாட்சி அம்மன் கோவில் நில விவகாரங்களைச் சீரமைத்தது மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியது எனப் பல்வேறு நற்பணிகளைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். “நம்முடைய ஆட்சியில் தலைவர் மக்களுக்காகப் பல முன்னோடித் திட்டங்களைச் செய்திருக்கிறார், நாமும் களத்தில் உழைத்திருக்கிறோம்; ஆனால், நல்லது செய்ததைச் சொல்லி ஓட்டு கேட்பதை விட, மக்கள் ஒரு முடிவை தீர்மானித்து வாக்களித்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அவர், மக்களுக்கு எல்லாம் தெரியும் என்பதால் இனி நாம் செய்த நன்மைகளைப் பேசிப் புலம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று எதார்த்தத்தை உடைத்துப் பேசினார்.
உரையின் போது, தேர்தல் தோல்வியைக் குறிப்பிட்டு அவர் பேசுகையில் கீழே இருந்த தொண்டர்கள் கைதட்டினர். இதனால் கோபமடைந்த மூர்த்தி, “ஆமா.. தோத்துப் போனதுக்கு கைதட்டுங்க! அதனாலதான் விளங்காமல் உட்கார்ந்திருக்கோம். திமுக நாசமா போனதுக்குக் காரணமே திமுககாரன்தான்!” என்று கடுமையாகச் சாடினார். மேலும், குடும்பத்தில் உள்ளவர்கள், பேரன், பேத்தி சொன்னார்கள் என்பதற்காகச் சிந்தித்து வாக்களிக்காமல் மாற்றுத் தரப்பினருக்கு மக்கள் வாய்ப்புக் கொடுத்துள்ளதாகவும், மக்கள் கொடுத்த இந்த நல்ல பாடத்திற்கு நன்றி என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியாக, திமுக இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது என்றும், எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இந்த இயக்கத்தை தற்போதைய தலைவரும் கட்டிக்காப்பார் என்றும் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். “இனிமேல் வெத்தலை பாக்கு வைத்து யாரையும் கட்சிக்கு அழைக்க வேண்டாம்; கட்சியில் உள்ள உண்மையான தொண்டர்களை அடையாளம் கண்டு, ஒரிஜினல் திமுகவை மட்டும் வளருங்கள், அதுவே நமக்கு கம்பீரமும் வலிமையும் தரும்” என்று கூறி, இனி வரும் காலங்களில் தொண்டர்கள் அனைவரும் முழுமையாகக் கட்சிப் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் ஆவேசமாக அறைகூவல் விடுத்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…
மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…
மனித வாழ்க்கையின் உன்னதமான பக்கங்களாக விளங்குவது குடும்ப உறவுகளின் பாசப் பிணைப்பும், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அளவற்ற அன்புமே ஆகும்.…