தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், பொதுத்தேர்தலில் தான் போட்டியிட்டு வென்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் திருச்சி கிழக்கை ராஜினாமா செய்துள்ளார். அதேநேரம், அதிமுக தரப்பில் யாரும் எதிர்பாராத திருப்பமாக பெருந்துறை, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இவர்களுடன் விராலிமலை எம்.எல்.ஏ சி. விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, இந்த 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த இடைத்தேர்தல் மூலம் தவெக-வோ அல்லது திராவிடக் கட்சிகளோ ஆட்சியைப் பிடித்துவிடப் போவதில்லை என்றாலும், இதனை ஒரு வாழ்வா சாவா போராட்டமாகவே மூன்று தரப்பும் பார்க்கின்றன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் பிம்பத்தை உடைக்க இந்தத் தேர்தல் உதவும் என திமுக நம்புகிறது. அதேவேளையில், அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறினாலும் தங்களின் பலம் குறையவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. தங்களுக்குள் வாக்குகள் பிரிந்து, அது தவெக-விற்குச் சாதகமாக முடிந்துவிடக் கூடாது என்பதில் திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மிகக் கவனமாக இருக்கின்றன.
இதன் காரணமாக, தவெக-வை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்காகத் திராவிடக் கட்சிகள் திரைமறைவில் ஒரு புதிய வியூகத்தை வகுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதன்படி, தாராபுரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளில் அதிமுக-விற்கு ஆதரவாக திமுக பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தவோ அல்லது மறைமுகமாக உதவவோ திட்டமிட்டுள்ளது. அதேபோல், திருச்சி கிழக்கு மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் திமுக-வின் வெற்றிக்கு அதிமுக வேலை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் நாம் தமிழர் கட்சியின் சீமானையும் அரவணைத்து, அவருக்கு அம்பாசமுத்திரம் தொகுதியை ஒதுக்கிப் பொதுவேட்பாளராக நிறுத்தவும் பரிசீலனை நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் நனவானால், அதிமுக (3), திமுக (2), நாதக (1) என்ற 3-2-1 கணக்கில் இந்த இடைத்தேர்தல் களம் அமையக்கூடும்.
மறுபுறம், இந்த 6 தொகுதிகளிலும் சொந்தக் கட்சி வேட்பாளர்களையே களமிறக்க தவெக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றினால், சட்டப்பேரவையில் தவெக-வின் பலம் 113 ஆக உயரும் என்பதால் அக்கட்சி தீவிரக் களப்பணியில் இறங்கியுள்ளது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக மக்கள் வாக்களிக்கும் போக்கு தங்களுக்குக் கைகொடுக்கும் என தவெக கணக்கு போடுகிறது. ஒருவேளை திராவிடக் கட்சிகள் தங்களுக்குள் உடன்பாடு செய்துகொண்டு வேட்பாளர்களை நிறுத்தினால், “எங்களை எதிர்க்க ஒட்டுமொத்தக் கட்சிகளும் கூட்டணி அமைத்துவிட்டன” என்ற அனுதாபப் பரப்புரையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…