அப்ப விஜயகாந்த் அதை பண்ணாரு, இப்ப இருக்கற நடிகர் சங்கம் அதை பண்ண முடியுமா..? விஜயகாந்த் நினைவேந்தலில் தேவயானி பரபரப்பு கேள்வி..

By Sumathi

Updated on:

நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடந்தது. இதில் நடிகர், நடிகையர் பலர் கலந்துக்கொண்டு விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர். அப்போது தேவயானியும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டார்.

   

இவர், வல்லரசு படத்தில் விஜயகாந்துடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேவயானி, விஜயகாந்த் குறித்த பல பெருமையான விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அதே வேளையில், ஒரு நடிகர் சங்க தலைவராக இருந்து சாதித்த விஷயங்களை, இப்போது உள்ள நடிகர் சங்கத்தால் நினைத்துப் பார்க்க முடியுமா, அதை செய்துதான் காட்ட முடியுமா என்ற கேள்வி எழுப்பி, அங்கிருந்த நடிகர், நடிகைகளை ஆச்சரியப்பட வைத்தார்.

அதாவது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக கேப்டன் விஜயகாந்த் இருந்த போது, நடிகர் சங்கத்துக்கு நிறைய கடன்கள் இருந்தது. ஆனால் அந்த கடன்களை தீர்க்க நடிகர்கள் யாரும் முன்வரவில்லை. இதையடுத்து விஜயகாந்த் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தினார்.

அதாவது ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட நடிகர், நடிகையர் அனைவரையும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கு நட்சத்திர கலை இரவு நடத்தினார். அதன்மூலம் கிடைத்த பெரிய வருவாயைக் கொண்டு நடிகர் சங்க கடன்களை அடைத்தார். அதுவரை அப்படி ஒரு துணிச்சலான செயலில் இறங்கி, நடிகர் சங்க கடனை அடைக்க எந்த நிர்வாகிகளும் முன்வரவில்லை. அதுபற்றி தான் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகை தேவயானி குறிப்பிட்டுப் பேசினார்.

தேவயானி பேசியதாவது, சிங்கப்பூர், மலேசியாவுல ஒரு ஷோ நடந்தது. அவரே டேட்ஸ் வாங்கி நம்மள ரெடி பண்ணி, யார் எங்க இருந்தாலும் அவங்களை கொண்டு வந்து சேர்த்தது அவரால மட்டும்தான் முடிஞ்சது. அவர் ஒரு தலைவரா இருக்கும்போதுதான் முடிஞ்சது. அதுக்கு அப்புறம் அந்த மாதிரி ஒரு விஷயத்தை நம்மாலே இனிமேல் பார்க்கவே முடியாது. மீண்டும் அப்படி எல்லோரும் ஒருமுறை மீண்டும் அப்படி போக முடியுமா, யோசிச்சு பாருங்க. ஆர்ட்டிஸ்ட்டுங்க எல்லோரும்.

இனிமேல் இது முடியுமா?. சேர்க்க முடியுமா எல்லாரையும் ஒரு இடத்துல. இப்படி எல்லாரையும் ஒண்ணா குடும்பமா சேர்த்து நம்மால ஒரு டிராவல் பண்ண முடியுமா? ஒரு கேள்விக்குறியா தான் இருக்கு. அவரா இருக்கறதனாலதான் அது முடிஞ்சது. அவர் ரொம்ப இயல்பான ஒரு மனுஷன். ரொம்ப சிம்பிளா ஒரு மனிதராக தான் அவரை பார்த்திருக்கிறேன் என்று பேசினார். இப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகளை குத்திக்காட்டி தேவயானி பேசிய விதம், பலரது மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

author avatar
Sumathi