மாமனாராக சிவாஜி மருமகனாக விஜயகாந்த்… பாசப்போராட்டமாக உருவான படம்- ஷூட்டிங் செல்லாமலேயே ட்ராப் ஆனது ஏன்?

By vinoth on ஏப்ரல் 30, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார். சிவாஜி நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

சிவாஜி கணேசன் 6 வயது சிறுவனாக இருக்கும் போதே நாடகக் கம்பெனியில் சேர்ந்து பல வேடங்களில் நடித்தார். பதின் வயதை எட்டியதும் அவருக்குப் பெண் வேடங்கள் கொடுக்கப்பட்டன. அதிலும் அவர் தன் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின்னர்தான் அவருக்கு தன்னுடைய 24 ஆவது வயதில் பராசக்தி பட வாய்ப்பு வந்துள்ளது.

   

அதன் பின்னர் 80 களின் தொடக்கம் வரை சிவாஜி கணேசன் கதாநாயகனாகவே படங்களில் நடித்தார். அதன்பின்னர் ரஜினி கமல் என்ற புதிய சூப்பர் ஸ்டார்கள் உருவாகிவிட்ட நிலையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். இருந்தும் அவ்வப்போது முதல் மரியாதை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றியைக் கொடுத்தார்.

   

90 களில் விஜய், அஜய் என பல இளம் நடிகர்களோடு இணைந்து நடித்தார் சிவாஜி கணேசன். அந்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை முழுமையாக மாற்றி இளம் ரசிகர்களுக்குப் பிடிப்பது போல நடித்தார். அப்போதுதான் விஜயகாந்தையும் சிவாஜி கணேசனையும் வைத்து ஒரு படத்தை இயக்க கதையெழுதியுள்ளார் இயக்குனர் வீ சேகர்.

 

குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து வரிசையாக வெற்றிப் படம் கொடுத்த அவர் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையிலான ஒரு பிரச்சனையை மையமாக வைத்து அந்த கதையை எழுதினாராம். ஆனால் ஷூட்டிங் செல்லும் நேரத்தில் சிவாஜி கணேசனுக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த படத்தை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.