அதிமுகவிலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் கொத்துக் கொத்தாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியலில் தினசரி நிகழ்வாக மாறிவிட்டது. இதுவரை சுமார் 35 சதவீத நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து தவெகவிற்குத் தாவிவிட்டதாக அக்கட்சியினரே ஒரு புள்ளிவிவரத்தைக் குறிப்பிடுவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “அதிமுக கூடாரம் வேகமாக காலியாகிறதோ?” என்ற அச்சத்தில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா விசுவாசிகள் கவலையிலும் கண்ணீரிலும் மூழ்கியுள்ளனர். இந்தத் தீவிரமான சூழல், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி காட்டமான விமர்சனங்களாகத் திரும்பத் தொடங்கியுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில், சீனியர் தலைவர்களின் வலியுறுத்தலின் பேரில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் தொடக்கத்திலேயே, “கட்சி மாறுபவர்களால் உங்களிடம் எழுந்துள்ள கவலையை அறிந்துதான் பேசுகிறேன்” என எடப்பாடி நேரடியாக விஷயத்திற்கு வந்தார். ஆனால், அவரைத் தொடர்ந்து பேசவிடாமல் இடைமறித்த நிர்வாகிகள், “கவலை மட்டுமல்ல அண்ணே, கட்சியின் எதிர்காலத்தை நினைத்து ஏற்பட்ட மன உளைச்சலால் பலருக்கும் பி.பி. எகிறியிருக்கிறது. புரட்சித்தலைவர், அம்மா காலத்தில் இல்லாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் உங்களிடம் எந்த மனமாற்றமும் இல்லாதது வருத்தமளிக்கிறது” என்று தங்களின் குமுறல்களைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
நிர்வாகிகளின் ஆதங்கத்தைக் கேட்டு அவர்களைச் சமாதானப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் இந்த அளவுக்கு யோசித்து கவலைப்பட வேண்டாம்” என்று கூறி ஒரு புதிய அரசியல் கணக்கை முன்வைத்தார். ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தவெகவிற்குச் சென்றவர்கள் அனைவரும் ஓரிரு மாதங்களில் மீண்டும் அதிமுகவிற்கே ஓடி வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். தவெகவில் இணையும் அதிமுக சீனியர்களுக்குப் பதவி கொடுத்தால், அங்கு ஏற்கனவே இருக்கும் ஒரிஜினல் தவெகவினர் அதை ஏற்க மாட்டார்கள் என்றும்; பதவி தராவிட்டால் சென்றவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், இதனால் தவெகவிற்குள் விரைவில் குழப்பம் வெடிக்கும், அப்போது அனைவரும் தாய் கழகத்திற்கே திரும்புவார்கள் என்பதால் கவலையின்றி இருக்குமாறு நிர்வாகிகளைத் தேற்றி அனுப்பியுள்ளார்.
இருப்பினும், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் வெளியேறிய நிர்வாகிகள் எடப்பாடியின் விளக்கத்தால் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. தவெக துணிச்சலுடன் மேற்கொண்டு வரும் அரசியலின் தீவிரத்தை எடப்பாடி பழனிசாமி இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். “அவருக்குக் கட்சி கரைகிறதே என்ற கவலை துளியும் இல்லை; தனக்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அவர் செயல்படுகிறார். தன்னை எதிர்க்கும் அனைவரும் கட்சியை விட்டுப் போனால் சரி என்று நினைக்கிறார்” என எடப்பாடியின் அரசியல் முதிர்ச்சியின்மை குறித்து நிர்வாகிகள் தங்களுக்குள் ஆதங்கத்துடனும் கவலையுடனும் பேசிச் செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…