தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முக்கிய நிர்வாகிகள், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் எனப் பலர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருவது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குத் தொடர்ச்சியாக, கட்சிக்குள் உருவாகியுள்ள இந்த இக்கட்டான சூழல் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வெளியேற்றங்களுக்குப் பின், பல்வேறு உட்கட்சிப் பூசல்களைத் தாண்டி எடப்பாடி பழனிசாமி கட்சியின் முழுக் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்திருந்த நிலையில், இந்த தற்போதைய விலகல்கள் அவருக்குப் பெரும் சோதனையாக அமைந்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையிலும், மாவட்ட அளவில் கட்சியைத் தக்கவைக்கத் தங்களது சொந்தப் பொருளாதாரத்தை முதலீடு செய்திருந்த முன்னாள் அமைச்சர்களும் முக்கிய நிர்வாகிகளும், 2026 தேர்தல் முடிவுக்குப் பிறகு தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து மறுபரிசீலனை செய்யத் தொடங்கியதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக தவெக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சமாதான முயற்சிகளுக்குப் பிறகும் நான்கு எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் காலியாகின. இதனைத் தொடர்ந்து கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத் போன்ற மூத்த முன்னாள் அமைச்சர்களும் தவெகவில் ஐக்கியமானது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய், ஆட்சியைப் பிடித்த பிறகும் தொடர்ந்து புதிய முகங்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறார். இது பலதரப்பட்ட அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரத்தில், அதிமுகவின் மிகப்பெரிய பலவீனமாக அதன் தலைமுறை மாற்றம் இல்லாத சூழல் சுட்டிக்காட்டப்படுகிறது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் பெரும்பாலும் மூத்த தலைவர்களே நீடிப்பதால், இளம் தலைமுறையினரை ஈர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கருத்துகள் எழுகின்றன. சமீபகாலமாக அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரே (IT Wing) கட்சிக்குள் புதிய இரத்தம் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்ற கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்து வருவது இந்த பலவீனத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இருப்பினும், தற்போதைய இந்த நிர்வாகிகளின் விலகல் அதிமுகவிற்குப் தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், அக்கட்சியின் அரசியல் அடித்தளத்தை அவ்வளவு எளிதாகக் குறைத்து மதிப்பிட முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த நிலையிலும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்த அதிமுக, தங்களின் வாக்குச் சதவீதத்தையும் ஓரளவிற்குத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தவெக தரப்பில் இருந்து தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை இழுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த இரு கட்சிகளுக்கிடையேயான போட்டியை மேலும் பலப்பரீட்சையாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க எடப்பாடி பழனிசாமி நிர்வாக அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவாரா மற்றும் இளைஞர்களுக்கு வழிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…
திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…
தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை…
சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன்…