தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார். அவருக்கு பின் ஒருவர் வர முன்னணில் இருந்தவரின் மார்க்கெட் காலியாகும். அப்படி சந்திரபாபுவுக்கு அடுத்து முன்னணி நகைச்சுவை நடிகராக வந்தவர் நாகேஷ்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் தனக்கு மார்க்கெட் குறைய ஆரம்பித்த போது தனது மகன் ஆனந்த் பாபுவை கதாநாயகனாக்கினார். பல படங்களில் நடித்த ஆனந்த் பாபுவுக்கு சரியான வெற்றிப்படம் அமையவில்லை. அதனாஅல் தானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்ற முடிவை எடுத்தார்.
அப்படி அவர் இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் பார்த்த ஞாபகம் இல்லையோ. ஆனந்த் பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த பத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்த படத்தில் தற்போதைய பிரபல இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். தன்னுடைய ஐம்பது ஆண்டுகால திரைவாழ்க்கையில் நாகேஷ் இயக்கிய ஒரே ஒரு திரைப்படம் இதுதான்.