MGR சென்ற காரை அலேக்காகத் தூக்கிய வெறித்தனமான ரசிகர்கள்.. மக்கள் திலகம் செய்த நெகிழ்ச்சியான செயல்..

By vinoth on வைகாசி 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அவரது ரசிகர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்க அடித்தட்டு மக்கள்தான். அதனால் அவரகளைக் கவர்வது போல அவர்களில் ஒருவராகவே எம் ஜி ஆர் வருவார். வந்து இருக்கும் தடைகளை உடைத்து முன்னேறுவார். இதனால் அந்த மக்கள் அவரை ஒரு நடிகராகவோ அல்லது நபராகவோ பார்க்காமல் தெய்வத்தைப் பார்ப்பது போல பார்த்தனர்.

   

அதனால்தான் அவர் அரசியலுக்கு வந்தபோதும் அவருக்கு வெற்றியைக் கொடுத்து அவரை முதலமைச்சர் ஆக்கினர். உலகிலேயே அவருக்கு இருந்தது போல வெறித்தனமான ரசிகர்கள் வேறு எந்த ஒரு நடிகருக்கும் இருந்திருக்க மாட்டார்கள்.

   

அப்படிப்பட்ட ஒரு ரசிகர் எம் ஜி ஆருக்காக செய்த செயலையும், அவருக்காக எம் ஜி ஆர் செய்த நெகிழ்ச்சியான விஷயம் பற்றியும் பார்ப்போம். எம் ஜி ஆரின், வெறித்தனமான ரசிகர் ஒருவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர். அவர் தன்னுடைய திருமணம் எம் ஜி ஆர் வந்து நடத்தி வைத்தால்தான் நடக்கும் என உறுதியாக இருந்துள்ளார். இதற்காக தினமும் எம் ஜி ஆர் முகவரிக்குக் கடிதம் போட்டுள்ளார். மேலும் எம் ஜி ஆர் வந்து திருமணத்தை நடத்தி வைக்கும் வரை சவரம் செய்துகொள்ள மாட்டேன் என தாடியும் வளர்த்துள்ளார்.

 

அரசாங்க அலுவல் காரணமாக எம்ஜி ஆர் பாண்டிச்சேரி போனபோது அந்த ரசிகனைப் பார்க்கலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் வீடு கடற்கரை ஓரமாக இருப்பதால் அங்கு சென்றால் கார் மணலில் மாட்டிக் கொள்ளும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் தனக்காக காத்திருக்கும் ரசிகனை பார்க்கவேண்டும் என எம்ஜி ஆர் சென்றுள்ளார். நினைத்தது போலவே கார் மணலில் சிக்கியுள்ளது.

அதற்குள் எம் ஜி ஆர் வந்த விஷயம் பரவிவிட, அவரின் ரசிகர்கள் வந்து காரை தூக்கில் மணலில் இருந்து வெளியில் எடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரின் ரசிகரை சந்தித்துள்ளார். எம் ஜி ஆரைப் பார்த்த சந்தோஷத்தில் தாடியை சவரம் செய்துவிட்டு உடனே திருமணத்துக்காகப் பார்த்து வைத்திருந்த பெண்ணை எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.