இங்கே வாடா… என அழைத்து விடிய விடிய சித்திரவதை… பாஜக அலுவலகத்தில் மண்டலத் தலைவர் மீது பைப், பெல்ட்டால் கொடூரத் தாக்குதல்…!

By Swetha on புரட்டாதி 14, 2026

Spread the love

பாஜக மண்டலத் தலைவர் சுனில் மீது அக்கட்சியின் எம்.எல்.ஏ கஜேந்திர தாரால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலை எடுத்து வருமாறு கூறி, கூட்டத்தின் பெயரில் டெல்லி பாஜக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட சுனில், இரவு முழுவதும் பூட்டப்பட்ட அறைக்குள் வைத்து பைப், தடி மற்றும் பெல்ட்டுகளால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டு, சாதிய ரீதியிலான இழிசொற்களால் அவர் ஏசப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுனிலின் சகோதரர் விஜய் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், ஆடைகள் களையப்பட்டு சுனில் கடுமையாகத் தாக்கப்பட்டதையும், அவரது உடலில் தோல்கள் உரிந்து கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் காட்டுகின்றன. வியாழக்கிழமை மாலை அழைத்துச் செல்லப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை காலையிலேயே விடுவிக்கப்பட்டார். இந்த துயரத்திற்குப் பிறகு, மருத்துவ அறிக்கை மற்றும் புகாருடன் காவல் நிலையத்தை அணுகியும், இதுவரை காவல்துறை தரப்பில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

   

https://twitter.com/ImAvdheshkumar/status/2098753051968639247/video/2

   

தற்போது எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் சுனிலின் வீட்டைத் தொடர்ந்து முற்றுகையிட்டு, வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல் விடுத்து சமரசத்திற்கு வற்புறுத்தி வருகின்றனர். இதனால் அச்சமடைந்துள்ள சுனிலின் குடும்பத்தினர், உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ கஜேந்திர தாரால் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் தீவிரமாகக் கோரி வருகின்றனர்.