வங்கதேசத்தில் பள்ளி மாணவி பிணைக்கப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குல்னா மாவட்டம் திகாலியா உபாசிலாவில் உள்ள காசிர்காட் பகுதியில் இயங்கி வரும் சையத் நைமுதீன் மேல்நிலைப் பள்ளியில், நந்திதா ராய் என்ற இந்து மாணவி படித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 8:00 மணியளவில், பள்ளியின் பூட்டப்பட்ட கழிப்பறைக்குள் இருந்து அழுகை மற்றும் முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட உள்ளூர் தொழிலாளர்கள் உடனடியாகக் கதவை உடைத்து, கைகள், கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இருந்த மாணவியை மீட்டனர். முதலுதவிக்குப் பிறகு, அவர் மேல் சிகிச்சைக்காக குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் தாய் சிமுல் ராய் ஊடகங்களுக்கு அளித்த தகவலின்படி, சம்பவத்தன்று பள்ளி பிற்பகல் 2:00 மணிக்கு முடிவடைந்துள்ளது. பள்ளி முடிந்ததும் நந்திதா கழிப்பறைக்குச் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பின்பக்கத்திலிருந்து அவரது தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் அவரது கைகள், கால்கள் மற்றும் வாயைக் கட்டி, மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
மேலும், அக்கிரமக்காரர்கள் அந்த மாணவியின் உடலில் பல இடங்களில் பிளேடால் வெட்டி ரத்தக் காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளூர் மக்களும் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
