சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.

Rahman and ilaiyaraaja
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அவருக்கு சரியான போட்டியாக அமைந்தது. வந்த சில ஆண்டுகளிலேயே ரஹ்மான் தனக்கான இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரஹ்மான் வருகை தன்னை எப்படி மாற்றியது என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “ரஹ்மான் வந்தப்போ, சிலர் என்கிட்ட உங்கப்பா அவ்வளவுதான்னு, ரஹ்மான்னு ஒருத்தர் வந்துட்டார்னு சொன்னாங்க. எனக்கு அது ஷாக்காக இருந்தது. நான் ரஹ்மான் பாட்டு கேசட் வாங்கிக் கேட்டேன். எல்லாமே நல்லா இருந்தது.
அப்போ எங்க அப்பா உருவாக்கின லெகஸி என்ன ஆகும்னு யோசிச்சேன். என் அண்ணன் இசையமைப்பாளர் ஆனாலும் அவர் கேரியர் பெரிசாக வளரவில்லை. அப்பாவோட பெருமையைக் காப்பாத்தணும்னு முடிவு பண்ணேன். அதுக்காகதான் நான் இசையமைப்பாளர் ஆகணும்னு முடிவு பண்ணேன். அப்படிதான் நான் சினிமாவுக்குள் வந்தேன். இதை ரஹ்மான் கிட்டயும் சொல்லி இருக்கேன். அதுக்கு முன்னாடி நான் பைலட் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்” எனக் கூறியுள்ளார்.