விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மகன் தியோ ஆழிசை, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தியோ ஆழிசை சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது தாய் ஆர்த்தி கண்டித்ததாக தெரிகிறது.
தாயார் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தியோ ஆழிசை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்குத் திரும்பி வந்த குடும்பத்தினர் சிறுவன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மரக்காணம் காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்துக் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
