திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராமர் (26) மற்றும் பிரசாந்த் (20) ஆகிய இரு இளைஞர்களும் குதிரைகள் மூலம் காய்கறிகளைச் சுமந்து சென்று தொழில் செய்து வந்தனர். கடந்த ஜூலை 30 அன்று, நிலத்தில் குதிரை மேய்ந்ததாகக் கூறி ரகு என்பவர் ராமரைத் தனது இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அரிவாள்களுடன் காத்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவர் மீதும் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் ராமர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த பிரசாந்த் தேனி அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் சாதிய பின்னணியில் நடந்த படுகொலை எனக் குறிப்பிட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ராமரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி, அரசு வேலை மற்றும் அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பிரசாந்தின் குடும்பத்திற்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக அவரது தாய் அச்சம் தெரிவித்துள்ளதால், அவர்களுக்குப் போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
