தாட்கோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் “துரித மின் இணைப்புத் திட்டம்” தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வேளாண் பணிகளை ஊக்குவிக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளது. பழங்குடியின விவசாயிகள் எவ்வித தடங்கலுமின்றி பாசன வசதியைப் பெறும் வகையில் இப்புதிய வடிவிலான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள விவசாயிகள் விரைவாகவும், குறைந்த செலவிலும் தங்களது விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பைப் பெற முடியும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசின் சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை 07.07.2026 அன்று அரசாணை எண். 108-ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி 2026-2027 ஆம் நிதியாண்டில் மொத்தம் 100 பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மொத்தச் செலவில் 90 சதவீதத் தொகையை அரசே மானியமாக வழங்குவதுடன், இதற்காக ரூ. 2.33 கோடி நிதியை அரசு ஒதுக்கி ஆணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பழங்குடியின விவசாயிகள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதமான newscheme.tahdco.com என்ற முகவரியில் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களுடன் விரைவாக விண்ணப்பித்து, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 90 சதவீத மானிய உதவியைப் பெற்று துரித மின் இணைப்பு பெற்றுப் பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
