திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடி கிராமத்தைச் சேர்ந்த யமுனா (23) என்ற பெண், நர்சிங் பயிற்சி முடித்து வேலை தேடுவதற்காகச் சென்னை வந்து குரோம்பேட்டையில் தனது தோழி ஸ்ரீஜாவுடன் (24) தங்கியிருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், இருவரும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். குரோம்பேட்டை மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் ஸ்ரீஜா தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்த நிலையில், யமுனா பைக்கோடு சேர்த்து லாரியால் சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலிஸார், யமுனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்து, கடப்பேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சதீஷ் (27) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
