ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலம் பாலாஜி பகுதியை சேர்ந்தவர் வினோத் (30). இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிவேதாவும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ரியா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின்போது நிவேதாவின் குடும்பத்தினர் 27 பவுன் தங்க நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். நிவேதாவுக்கு தாய், தந்தை கிடையாது.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் வினோத்தின் பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். நிவேதாவும் வினோத்தும் வீட்டில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிவேதா அறைக்குள் சென்று கதவை போட்டி கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது நிவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு வினோத் அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று நிவேதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதிக வரதட்சணை கேட்டு நிவேதாவை கொடுமை படுத்தியதாகவும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் நிவேதாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
