“அவன் என்னை வாழ விட மாட்டான்…!” கணவருக்கு உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு… இளம்பெண் தற்கொலை… தவெக பிரமுகர் கைது… குமரியில் பரபரப்பு…!!

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரையைச் சேர்ந்த அனிஷா என்பவர், தனியார் பள்ளியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஷ் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். அனிஷா வேலைக்குச் சென்று வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தவெக பிரமுகரான சங்கர் என்பவர் அவருக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அனிஷா தன் கணவரிடம் தொலைபேசியில் கூறி வருந்தியுள்ளார்.

கணவர் ஊருக்கு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என ஆறுதல் கூறியபோதிலும், சங்கரின் தொல்லைகள் தொடர்ந்துள்ளன. இதனால் தீவிர மனவேதனையடைந்த அனிஷா, தன் கணவருக்கு “அவன் என்னை வாழ விட மாட்டான். குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் போகிறேன்” என இறுதி குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

   

சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மகேஷ் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வழக்கை தீவிரமாக விசாரித்த குலசேகரம் காவல்துறையினர், பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக தவெக பிரமுகர் சங்கரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.