வாட்ஸ்அப்பில் திருமண போட்டோ… அடுத்த சில மணி நேரத்தில் பிணமான 21 வயது புதுமணப்பெண்…. ஆட்டுக்கொட்டகை கிணற்றில் காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்த 21 வயதான சுமலதா என்பவருக்கும், அவரது உறவினரான கஜேந்திரா என்பவருக்கும் இடையே காதல் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய சுமலதா, தனது உறவினர்களான போரேஷ் மற்றும் அசோக் உதவியுடன் நாயக்கனஹட்டி பகுதியில் உள்ள ஓர் ஆட்டுக்கொட்டகைக்குச் சென்று தங்கியுள்ளார். மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம், ராமசாகரா அருகே உள்ள ஈஸ்வரநதிஹிப்பே கோவிலில் கஜேந்திராவுக்கும் சுமலதாவிற்கும் சுற்றத்தார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படங்கள் சுமலதாவின் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், புதுமணத்தம்பதியர் மீண்டும் அந்த ஆட்டுக்கொட்டகைக்கே திரும்பியுள்ளனர்.

திருமணம் முடிந்த சில மணிநேரங்களிலேயே, இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற சுமலதா நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த கஜேந்திராவும் அவரது நண்பர்களும் அப்பகுதி முழுவதும் தேடியும் சுமலதாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், மகளைக் காணவில்லை என சுமலதாவின் பெற்றோர் தலக்கு காவல் நிலையத்தில் சனிக்கிழமையன்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை மாலை என். மகாதேவபுரா கிராமத்தில் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு அருகிலிருந்த பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து சுமலதாவின் சடலத்தைக் மீட்டெடுத்தனர்.

   

திருமணமான அன்றே புது மணப்பெண் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமலதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டுவர இந்த வழக்கு மொளகால்முரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.