கடந்த 2018-ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமான ஒரு நபர், தான் உளவுத்துறையில் பணியாற்றுவதாகவும், தற்போது ஹைதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதாகவும் கூறி இளம் பெண் ஒருவரிடம் பழகியுள்ளார். தனது பணி நிமித்தமாக சுய விவரங்களைப் பகிர முடியாது எனக் கூறிய அந்த நபரை உண்மை என நம்பிய அப்பெண், அவரோடு தீவிரக் காதலில் விழுந்துள்ளார். சில மாதங்களுக்குப் பிறகு, தான் பயன்படுத்திய கணக்கு தனது நண்பனுடையது என அந்த நபர் கூறியதால் சந்தேகம் அடைந்த பெண் விலக முயன்றபோதும், திருமண ஆசை காட்டி மீண்டும் அவரைத் தனது மாய வலையில் வீழ்த்தியுள்ளார்.
காதலன் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நம்பிய அப்பெண், தனது வீட்டினர் பார்த்த பல வரன்களை நிராகரித்து விட்டு குடும்பத்தினரையும் இத்திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்துள்ளார். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நேரில் சந்திக்காமல் பல்வேறு காரணங்களைக் கூறி அந்த நபர் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் படிப்பை பாதியில் நிறுத்தி, நல்ல வேலையும் இல்லாமல், திருமண வயதையும் கடந்த அந்தப் பெண், தற்போது காதலனால் ஏமாற்றப்பட்டு குடும்பத்தாரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிக் கண்ணீரில் தவித்து வருகிறார்.
