கோவை மாநகரின் மிகவும் பரபரப்பான திருச்சி சாலையில், உயிருக்கே ஆபத்தான வகையில் இளைஞர் ஒருவர் பைக் ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சிங்காநல்லூர் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த இளைஞர், ஒரு கையால் மட்டுமே வாகனத்தின் ஹேண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு, பெட்ரோல் டேங்க் கவரின் மேல் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பை மற்றொரு கையால் இயக்கியபடியே பயணித்துள்ளார். சுற்றிலும் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்த போதிலும், சிறிதும் அச்சமின்றித் தனது முழு கவனத்தையும் கணினி திரையிலேயே பதித்து அவர் பைக் ஓட்டிய காட்சி, சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளை உரைய வைத்தது.
இளைஞரின் இந்த ஆபத்தான சாகசத்தை பின்னால் வந்த பயணிகள் சிலர் தங்களது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவைக் கண்டு கொந்தளித்த நெட்டிசன்கள், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் சம்மந்தப்பட்ட நபரின் உயிரை மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்ற பொதுமக்களின் உயிரையும் ஆபத்தில் தள்ளுவதாகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினர் இந்த வீடியோவின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி, அந்த இளைஞரைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
