வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அசோக்குமாரின் மகள் பிரியதர்ஷினி, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரைக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டார். ராஜ்குமார் ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்ததால், பிரியதர்ஷினி அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் எனப் பெற்றோர் அறிவுறுத்தினர். இருப்பினும், அந்தப் பேச்சை மீறித் திருமணம் செய்துகொண்ட பிரியதர்ஷினி, திருமணத்தைப் பதிவு செய்யுமாறு வற்புறுத்தியதால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, பிரியதர்ஷினி தனது தோழியிடம் பேசிவிட்டுத் தனது அலைபேசியை அணைத்து வைத்துள்ளார். சிறிது நேரத்தில், அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளது. பெங்களூர் சென்று மகளின் உடலைப் பார்த்த பெற்றோர், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளின் மரணத்திற்குப் பின்னால் கணவர் ராஜ்குமாரின் கொடுமைகளே காரணம் என்றும் கூறி, அவரைக் கைது செய்யக் கோரி பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், பெங்களூர் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தாமல், ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகப் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த பெற்றோர், பிரியதர்ஷினியின் உடலை காட்பாடிக்குக் கொண்டு வந்து, காட்பாடி காவல் நிலையம் முன்பாக வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த காட்பாடி காவல் ஆய்வாளர் தயாளன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரியதர்ஷினியின் உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் சம்மதித்தனர். திருமணம் முடிந்து இரண்டே மாதங்களில் செவிலியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ராஜ்குமாரின் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
