காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி லதா (35). இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் பலராமன், குடும்பத்திற்காக அயராது உழைத்து வந்துள்ளார். இந்தச் சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (27) என்பவருடன் லதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணமான வசந்தும் லதாவும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், அவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இதனால் லதாவின் கணவர் பலராமன், மனைவியைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்தக் கள்ளக்காதல் விவகாரம் இருவரது குடும்பத்தினருக்கும் மற்றும் ஊர் மக்களுக்கும் தெரிந்ததையடுத்து, அவர்கள் இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இருப்பினும், லதாவும் வசந்தும் தங்களது உறவைக் கைவிடவில்லை. தொடர்ந்து ரகசியமாகச் சந்தித்து வந்த அவர்கள், கடந்த ஐந்தாம் தேதி சென்னை கொளத்தூர் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு வைத்து, தனது குடும்பத்தை விட்டுவிட்டுத் தன்னுடன் வந்துவிட வேண்டும் என்று லதா, வசந்தைக் கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த வசந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லதாவின் கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். லதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வருவதற்குள், வசந்த் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த லதா, கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
காவல்துறையினர் அமைத்த தனிப்படை, வசந்தின் செல்போன் சிக்னலை வைத்து அவர் சென்னை மாதவரத்தில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். உடனே அங்கு விரைந்த போலீசார், வசந்தைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லதா தன்னிடம் குடும்பத்தை விட்டுவருமாறு கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே அவரைக் கொலை செய்ய முயன்றதாக வசந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வசந்த் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
