உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் சிக்கந்தரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பி.காம் படித்துக்கொண்டே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஓம்கார் என்ற வேலையில்லாத வாலிபன், கடந்த ஒரு வருடமாக அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தித் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இந்நிலையில், புதன்கிழமை காலை 10:30 மணியளவில் அந்தப் பெண் வழக்கம்போல பணிக்கு ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது, சாஸ்திரிபுரம் சந்திப்பில் ஓம்கார் தனது கூட்டாளியுடன் பைக்கில் வந்து வழிமறித்துள்ளான். தன்னுடன் வருமாறு அழைத்தபோது பெண் மறுக்கவே, ஸ்கூட்டர் சாவியைப் பிடுங்கிய ஓம்கார், அந்த பெண் தனது வீட்டாருக்குப் போன் செய்ய முயன்றபோது போனைப் பிடுங்கி கீழே தள்ளி மிதித்துத் தாக்கியுள்ளான். பெண் எதிர்த்துப் போராடவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்து மற்றும் முதுகில் சரமாரியாகக் குத்தியுள்ளான்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, ஓம்காரும் அவனது கூட்டாளியும் பெண்ணின் தங்கச் சங்கிலி மற்றும் ரூ.2,800 பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் கொடூரக் குற்றவாளி ஓம்காரைக் கைது செய்து, தப்பிய அவனது கூட்டாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
